பதிவு செய்த நாள்
01
செப்
2014
12:09
அவிநாசி : அவிநாசி பைபாஸ் ரோடு அருகில் கட்டப்பட்டுள்ள ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக பூஜை, கடந்த 28ல், கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று அதிகாலை 5.00 மணிக்கு, நிறைவு கால யாக பூஜை துவங்கி, காலை 7.40 மணி வரை நடைபெற்றது. அதன்பின், யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசங்கள், செண்டை மேளம் முழங்க, கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. ஒரே நேரத்தில் சித்தி விநாயகர், வேல்முருகன் மற்றும் ஐயப்ப சுவாமி கோவில் கோபுர கலசங்களில், புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், மூலவ மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. பந்தள ராஜா அஸ்வதி ராமவர்மா, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பூஜை செய்தார். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், பேரூராதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி, கூனம்பட்டி நடராஜ சுவாமி, அவிநாசி வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமி ஆகியோர், பக்தர்களுக்கு அருளுரை வழங்கினர். விழா ஏற்பாடுகளை, ஸ்ரீசபரி சாஸ்தா அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.