அந்த காலத்தில் வீடு என்பது வாழ்க்கைப் பாடமாக இருந்தது. படிப்படியாக வாழ்வில் ஏறுவதற்கு படிக்கட்டாக படிப்பு ஒருவனுக்கு துணை செய்கிறது. படியில் ஏறினால் வருவது நடை (வீட்டு வாசல்). படித்ததைப் பின்பற்றி மனிதன் அதன்படி நடக்க வேண்டும் என்பதை அது நமக்கு உணர்த்துகிறது. நடையின் முடிவில் கூடம்(ஹால்) வரும். எல்லோரும் ஒன்று கூடும் இடம் கூடம். நல்வழியில் நடப்பவர்கள் எல்லாம் சமுதாயத்தில் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். கூடத்திற்கு அடுத்தது முற்றம். வாழ்வில் லட்சியம் முற்றுப்பெறுவது போல வீடும் முற்றத்தில் முடிவுறும். அடுத்தது கொல்லைப்புறம் என்னும் வெளிப்பகுதி. லட்சியத்தை அடைந்த மனிதன், கடவுள் என்னும் பெருவெளியில் இரண்டறக் கலந்து விடுகிறான்.