பதிவு செய்த நாள்
10
செப்
2014
01:09
புதுடில்லி: புனித நதியான கங்கையை சுத்தப்படுத்துவதை, தன் கனவு திட்டமாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இன்னும், மூன்று ஆண்டுகளில் கங்கையை சுத்தப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த நீர் மேலாண்மை தொடர்பான கருத்தரங்கில், இஸ்ரேல் நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக துறைக்கான உயர் அதிகாரி யோனாதான் பென்ஜாகான் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது: புனித நதியான கங்கையை சுத்தப் படுத்தும் பணியில், எங்களையும் இணைத்து கொள்ள விரும்புகிறோம். நீரை சுத்திகரிப்பது, நீர்நிலைகளில் உள்ள கழிவுகளை அகற்றுவது ஆகிய துறைகளில் இஸ்ரேலின் தொழில்நுட்பம் சிறந்து விளங்குகிறது. எனவே, கங்கையை சுத்தப்படுத்தும் பணிக்கு, எங்களால் உதவ முடியும் என நினைக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.