பதிவு செய்த நாள்
10
செப்
2014
01:09
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் உள்ள முத்தாரம்மன் கோயில் தசரா விழா செப்., 24 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கர்நாடகாவில் மைசூருக்கு அடுத்ததாக, தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டிற்கான விழாவிற்கு செப்., 24 ல் கொடியேற்றம் நடக்கிறது. அன்று காலை 5:00 மணிக்கு அலங்கரிப்பட்ட யானையில் கொடிப்பட்ட திருவீதியுலாவும், காலை 6:00 க்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்களும், 9:00 மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது. அதன்பின், மாறுவேட பக்தர்கள் மஞ்சள் பூசப்பட்ட திருக்காப்புகள் அணிந்து விரதம் இருப்பர். விழா நாட்களில் அம்மன் தினமும் ஒரு அலங்காரத்தில், வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
அக்., 3 ல் காலை 6:00 மணி முதல் இரவு வரை சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடக்கும். இரவு 12:00 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலில் எழுந்தருளுவார். அங்கு மகிஷா சுரன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து பல்வேறு உருவங்களில் மாறு வேடம் அணிந்து வரும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவர். இதற்காக தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் குலசேகரப்பட்டிணத்திற்கு இயக்கப்படவுள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அன்பு மணி, நிர்வாக அதிகாரி கணேசன், தக்கார் செல்லத்துரை செய்து வருகின்றனர்.