ஈரோடு: திண்டல் வேலாயுத ஸ்வாமி கோவிலில், துலா பார தராசை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார். ஈரோடு திண்டல் வேலாயுத ஸ்வாமி கோவிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நடந்து சில ஆண்டுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். பவுர்ணமியில் ஸ்வாமி தரிசனம் செய்ய ஏதுவாக கிரிவல பாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கிருத்திகை தினமான நேற்று மேட்டுகடையை சேர்ந்த சாமிநாதன், வேல்முருகன் குடும்பத்தினர், நேர்த்தி கடனை நிறைவேற்றும் பொருட்டு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள துலா பார தராசை காணிக்கையாக வழங்கினார். தராசு 100 கிலோ வரை எடை தாங்க கூடியது. கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.