பதிவு செய்த நாள்
01
அக்
2014
12:10
சிவகங்கை: சிவகங்கை சனீஸ்வரன் கோவில் பிரசாதம் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெ., விற்கு பார்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மஜித் ரோட்டில் சனீஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோவில் நிர்வாகத்திற்கு நேற்று காலை பெங்களூருவில் இருந்து ஒரு தகவல் வந்தது. அதில் பேசிய அமைச்சரின் உதவியாளர் ஒருவர், சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அதற்கான பிரசாதத்தை பார்சலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதை உறுதி செய்த கோவில் நிர்வாகி பாபு பூஜைக்கான ஏற்பாடு செய்தார். இதன்படி பால், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம், மஞ்சள் உட்பட 9 வகையான பூஜையை பூஜாரி செல்வராஜ் செய்தார். நகர அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பாண்டி, வட்ட செயலர்கள் சரவணன் சேதுபதி, பாண்டிகுமார் உட்பட சிலர் பங்கேற்றனர். பூ, விபூதி, குங்குமம் அடங்கிய பிரசாதத்தை பெங்களூருக்கு அனுப்பி வைத்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.நிர்வாகி பாபு கூறுகையில், "விருதுநகர் மாவட்ட அமைச்சர் ஒருவரின் நேர்முக உதவியாளர் எனக் கூறி ஒருவர் நேற்று காலை 7 மணிக்கு எனது மொபைலில் பேசினார். உள்ளூர் கட்சி நிர்வாகிகளை வைத்து, சிறப்பு பூஜை நடத்தி, பெங்களூரு சிறையிலுள்ள ஜெ.,விற்கு வழங்கும் வகையில் பிரசாதம் அனுப்புமாறு கூறினார். நிர்வாகிகள் சிலரை பங்கேற்க செய்து சிறப்பு பூஜை செய்து பிரசாதம் அனுப்பியுள்ளோம்,” என்றார்.பூஜாரி செல்வராஜ் கூறும்போது, "சனிப்பெயர்ச்சி மார்கழியில் துவங்கும் நிலையில் ஆண்டின் இறுதியில் சிலரை சனி பகவான் துன்பப்படுத்தலாம். இது போன்ற பிரச்னை தீர இச்சிறப்பு பூஜை உதவியாக இருக்கும்,” என்றார்.