பதிவு செய்த நாள்
01
அக்
2014
12:10
சென்னை: செயல் அலுவலர் நியமனத்தை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் ஜன., 6ம் தேதி உத்தரவிட்டதை அடுத்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில், அறநிலையத் துறையால் வைக்கப்பட்ட உண்டியல்கள், இன்று அகற்றப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.தமிழகத்தில் உள்ள, மிகப் பழமையான கோவில்களில் ஒன்றான, சிதம்பரம் நடராஜர் கோவிலை, 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக, தீட்சிதர்கள் நிர்வகித்து வருகின்றனர்.இவர்கள் நிர்வாகத்தில், முறைகேடு நடக்கிறது என்று கூறி, இக்கோவிலுக்கு அறநிலையத் துறை செயல் அலுவலரை நியமிக்க, 1987ல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து, தீட்சிதர்கள் சார்பில், பல்வேறு கோர்ட்களில் தொடரப்பட்ட வழக்குகளின் முடிவாக, ஜன., 6ம் தேதி, சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில், செயல் அலுவலர் நியமனம் ரத்து செய்யப்பட்டதுடன், கோவில் நிர்வாக பணி குறித்த சில வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டன. தீட்சிதர்கள் மட்டுமல்லாது, நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள், இத்தீர்ப்பை வரவேற்றனர். இக்கோவிலுக்கு, அறநிலையத் துறை செயல் அலுவலர் நியமனம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, கோவில் நிர்வாகம் பொது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அரசாணை: சுப்ரீம் கோர்ட் உத்தரவை, செயல்படுத்துவதற்கான நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்படாததால், 2009 முதல், அறநிலையத் துறையால் இங்கு வைக்கப்பட்ட உண்டியல்கள், பிரசாத விற்பனையகங்கள் அகற்றப்படாமல் உள்ளன.இந்நிலையில், இதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய அரசாணை, கடந்த 19ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்த போது, செயல் அலுவலரால் வைக்கப்பட்ட உண்டியல்களை அகற்றுவது, ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த பிரசாத விற்பனையகங்களை அகற்றுவது, அறநிலையத் துறை வசம் இருந்த காலத்தில் நடந்த வரவு செலவு கணக்குகளை, பொது தீட்சிதர்களிடம் ஒப்படைப்பது, ஆகியவை பற்றி, அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இன்று ஒப்படைப்பு: அரசாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஐந்து இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களை, இன்று அகற்ற, அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. செப்., 30 வரை இந்த உண்டியல்களில் செலுத்தப்பட்ட காணிக்கை தொகையை எண்ணி, தீட்சிதர்களிடம் ஒப்படைக்கவும், ஏற்கனவே இதில் வசூலாகி வங்கியில் செலுத்தப்பட்ட தொகைகளையும், பிரசாத விற்பனையகங்கள் வாயிலாக வசூலான தொகையையும், புதன்கிழமை ஒப்படைக்க அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, அறநிலையத் துறை அதிகாரிகள், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இன்று செல்கின்றனர். இதனால், இக்கோவில் தீட்சீதர்களின் முழுமையான நிர்வாகத்துக்கு வந்துவிடுகிறது.