நாகர்கோவில் : தேசதந்தை காந்தியடிகள் 1948-ம் ஆண்டு டெல்லியில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. பின்னர், பிப்., மாதம் 12-ந் தேதி கன்னியாகுமரிக்கு எடுத்து வரப்பட்டு முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது. முன்னதாக அவரது அஸ்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் வைக்கப்பட்டது. அங்கு அவரை நினைவுகூறும் வகையில் காந்தி நினைவுமண்டபம் எழுப்பப்பட்டு 1959-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.இந்த மண்டபத்தில் உள்ள காந்தி அஸ்தி கட்டத்தின் மீது ஆண்டுதோறும் காந்திஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ந் தேதி அன்று பகல் 12 மணிக்கு அபூர்வ சூரியஒளி விழும். இந்த அபூர்வ சூரியஒளியை காண அன்றையதினம் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இந் நிகழ்ச்சி , காந்தி பிறந்தநாளான வருகிற 2-ந் தேதி காலை 11 மணிக்கு சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் பலரும் பங்கேற்க உள்ளனர்.