கன்னியாகுமரி : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். வரும் மூன்றாம் தேதி 10ம் நாள் விழா அன்று மாலையில் பகவதிஅம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் வழியாக பரிவேட்டை செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதையொட்டி கோவிலில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் பகவதிஅம்மன் வெளியே வரும்போது பேண்ட் இசையுடன் கூடிய துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுவது வழக்கம். இந்த முறை மன்னர் ஆட்சி காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.இடையில் கடந்த2012 மற்றும் 2013ம் ஆண்டு மீண்டும் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதே போல் இந்த ஆண்டும் வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி பகவதிஅம்மன் பக்தர்கள் சங்கத்தினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.