பதிவு செய்த நாள்
04
அக்
2014
12:10
பழநி: பழநி விஜயதசமியை முன்னிட்டு, மலைக்கோயிலிருந்து பராசக்திவேல் புறப்பாடாகி, வன்னிகா சூரன் வதம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பழநியில் நவராத்திரி விழா செப்.,24 காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதில் நேற்று முக்கிய நிகழ்ச்சியான விஜயதசமி விழாவையொட்டி பழநி மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. வழக்கமாக மாலை 5.30 மணிக்கு நடைபெறும், சாயரட்சை பூஜை முன்னதாக பிற்பகல் 1.30 மணிக்கு நடந்தது. அதன்பின் மலைக்கோயில் சன்னதி நடை சாத்தப்பட்டது. வன்னிகாசூரனை வதம்செய்ய, பிற்பகல் 2.30 மணிக்கு மலைக்கோயிலிருந்து பராசக்திவேல், படிப்பாதை வழியாக கீழே கொண்டுவரப்பட்டு, ஊர்வலமாக பெரியநாயகியம்மன் கோயிலுக்கு எடுத்துச்சென்றனர். அங்கிருந்து தங்ககுதிரைவாகனத்தில் முத்துக்குமாரசுவாமி பராசக்திவேல், கேடயம், வில், அம்புடன் கோதை மங்கலத்திற்கு புறப்பட்டார்.சூரன் வதம்: கோதை மங்கலம் கோதையீஸ்வர ஆலயம் முன், புலிப்பாணி பாத்திரசுவாமிகள், துர்க்காவாக அவாகனமாகி வாழைமரம் மற்றும் வன்னிமரத்தில் அம்பு ஏய்து, வன்னிகா சூரன் வதம் நடந்தது. முத்துகுமாரசுவாமி பெரியநாயகியம்மன் கோயிலுக்கும், பராசக்திவேல் மலைக்கோயிலுக்கு வந்த பின், நள்ளிரவில் அர்த்தசாம பூஜை நடந்தது.