பதிவு செய்த நாள்
04
அக்
2014
12:10
புதுச்சேரியின் பல்வேறு கோவில்களில் காலத்தால் அழியாத மூலிகை ஓவியங்கள் தீட்டப்படுவது, பக்தர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மன்னார்கள் ஆட்சி காலத்தில், கோவில்களில், மூலிகை வர்ணங்களால் ஓவியங்கள் தீட்டப்பட்டன. பல நுாற்றாண்டுகளை கடந்தும், இந்த ஓவியங்கள் பழமை மாறாமல் பல கோவில்கள் இன்றைக்கும் காட்சி அளிக்கின்றன. வளர்ந்துவிட்ட விஞ்ஞான உலகில், அனைத்தும் செயற்கைக்கு மாறிவிட்ட இன்றைய சூழலில், கோவில்களில் மூலிகை ஓவியங்கள் தீட்டப்படுவதும், மூலிகை ஓவியர்களும் கிடைப்பது அரிதாகிவிட்டது. இந்நிலையில், புதுச்சேரியின் பல்வேறு கோவில்களில் காலத்தால் அழியாத மூலிகை ஓவியங்கள் மீண்டும் தீட்டப்பட்டு வருகிறது. பெத்துசெட்டிப்பேட்டை முருகன் கோவிலில் கடந்த சில நாட்களாக காரைக்குடியை சேர்ந்த ஸ்தபதி ரமேஷ் தலைமையிலான மூலிகை ஓவியர்கள், கோவில் சீலிங்கில் அழகான மூலிகை ஓவியங்களை தத்ரூபமாக தீட்டி வருகின்றனர். சிவன், ஆஞ்சநேயர், லட்சுமி, மலேசியா முருகன் போன்ற ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலிகை ஓவியங்களை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். ஸ்தபதி ரமேஷ் கூறுகையில்,’நமது முன்னோர்களின் அற்புதமாக ஓவியக்கலை இது. அவர்களின் வழிமுறைகளை பின்பற்றி தாவரங்களிடமிருந்து இயற்கை வர்ணங்களை சேகரித்து ஓவியங்களை வரைகிறோம். மஞ்சள் நித்தினி தாவரத்திலிருந்து மஞ்சள் நிறமும், பூக்களிலிருந்து சிகப்பு நிறமும், ஏனைய நிறமும் உருவாக்கப்படுகிறது. ஓவியங்களில் வர்ணமேற்றும்போது, சிறிது பிசகினாலும் மொத்த ஓவியமும் அலங்கோலமாகிவிடும். கோவில் ஓவியங்கள் மூலம் வர்ணகலையின் மூலம் உயிர்கொடுக்கும்போது பொறுமையும், கற்பனையும் முக்கியம். அழிந்துபோன மூலிகை ஓவியக் கலைக்கு, கோவில்கள் தான் மீண்டும் உயிர்கொடுக்கின்றன” என்றார்.