பதிவு செய்த நாள்
06
அக்
2014
01:10
பென்னாகரம்,: கூத்தப்பாடி கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் விழா, கடந்த 4ம் தேதி துவங்கியது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே, கூத்தப்பாடி கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள திரவுபதி, அர்ச்சுணன், பீமன், கிருஷ்ணன், சகாதேவன், துரியோதனன் போன்ற பதினாறு ஸ்வாமிகளின் சிலை உள்ளது. ஆண்டுதோறும், புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை முதல், இக்கோவிலில் இருந்து, கூத்தப்பாடி, கே.குள்ளாத்தரம்பட்டி, பொச்சாரம்பட்டி, அலேபுரம், கே.அக்ரஹாரம், மடம், சின்னப்பல்லனூர் ஆகிய ஏழு ஊர்களுக்கும், இச்சிலைகளை எடுத்து சென்று தீமிதி திருவிழா நடத்துவது வழக்கம். இந்தாண்டு, நான்காம் தேதி திரவுபதி அம்மன் கோவிலில் விழா துவங்கியது. தொடர்ந்து, ஒன்பது நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில், கே.குல்லாத்தரம் பட்டி,கே.அக்ரஹாரம், மடம், சின்னப்பல்லனூர் பகுதிகளில் தீ மிதி திருவிழா நடக்கிறது. மழை பெய்ய வேண்டி, இத்திருவிழா ஆண்டுதோறும் நடந்து வருவதாக, அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.