பதிவு செய்த நாள்
06
அக்
2014
01:10
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் முத்திகை நல்லான் குப்பத்தில், கத்தி சேர்வை நேற்று முன்தினம் நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் முத்திகை நல்லான் குப்பம் பெரிய தெருவில், ஆண்டுதோறும், புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமையன்று, கத்தி சேர்வை நடைபெறுவது வழக்கம். பல நுாறு ஆண்டுகளுக்கு முன், ஏழுமலையான் அருளால் ஆட்கொண்ட ஒருவர், கத்தி மீது ஏறி நின்று, அருள்வாக்கு அளித்ததாகவும், அந்நாள் முதல், அதே இடத்தில், ஏழுமலையான் அருள்கொண்ட ஒருவர், 21 கூர்மையான கத்திகளால் படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட, ஏணி மீது ஏறி நின்று, ஒவ்வொரு ஆண்டும் அருள்வாக்கு கூறிவது வழக்கமாக உள்ளது.இந்த இடத்தில், கோவில் ஏதுமின்றி முன்னோர் வழிபட்ட இடத்திலேயே, தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் இரவு, கத்தி மேல் ஏறி நின்று ஏழுமலையானால் ஆட்கொண்ட ஒருவர் அருள்வாக்கு கூறினார். நிகழ்ச்சியில் கோவிந்தா... கோவிந்தா... எனும் கோஷங்களுடன், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பக்தர்கள், மழை நிலவரம், கால்நடைகள் ஆரோக்கியம் பற்றி பக்தர்கள் கேட்டனர்.மழை குறைந்த அளவே இருக்கும். ஆடு, மாடுகள் நோயின்றி இருக்கும், என, அருள்வாக்கு கூறினார்.