பதிவு செய்த நாள்
10
அக்
2014
10:10
போடி: கி.பி., 16ம் நுாற்றாண்டில், தன் குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு, தாய் ஒருவர், தீயில் பாய்ந்ததன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சதிக்கல், தேனி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போடி சி.பி.ஏ., கல்லுாரி வரலாற்றுத் துறை ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு மையம் சார்பில், முதல்வர் ராஜராஜன், பேராசிரியர்கள் ஞானசேகரன், மாணிக்கராஜ், கபேஷ், கனகராஜ் ஆகியோர், சின்னமனுார் அருகே காமாட்சிபுரம் ஓடைப்பட்டி சுற்றுப் பகுதியில், கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, தமிழகத்தில் அரிதாக கிடைக்கக் கூடிய, கி.பி., 16 - 17ம் நுாற்றாண்டு காலத்து, சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சதிக்கல், தமிழகத்தில் காணப்படும் சதிக்கற்களிலே, சற்று வேறுபாடுடையதாகக் காணப்படுகிறது. பொதுவாக, கணவன் இறந்த பின், மனைவி மட்டுமே, சிதையில் (தீயில்) பாய்ந்து இறந்ததை காட்டும் வகையில், சதிக்கல் நட்டு வழிபடுவர். ஆனால், இந்த சதிக்கல்லில், தாய் தன் குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு, தீயில் பாய்ந்த நிலை காணப்படுகிறது. அப்பெண்ணின் சிகை அலங்கார நிலை, அணிகலன் அலங்கார நிலையைக் கொண்டு, இந்த கல், கி.பி., 16 - 17ம் நுாற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம் என, கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பிற்காலத்தில், ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள், தங்கள் காவல் தெய்வங்கள் எனக் கருதி, இந்த சதிக்கல்லின் இரு பக்கமும், இரு கற்களை நட்டு, தற்போது வணங்கி வருகின்றனர்.