பதிவு செய்த நாள்
23
அக்
2014
02:10
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 108 திவ்யதேச திருமண் மற்றும் தீர்த்தம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது; இதற் காக, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.திருப்பூரில், பழமைவாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் உள்ளது. சயன கோலத்தில் எம்பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், மூன்று கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.முழுவதும் கற்களால் ஆன ஆஞ்சநேயர் கோவில் மற்றும் முன்மண்டபம், ஸ்ரீசுதர்சன பெருமாள் சன்னதி, ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் சன்னதி, ஸ்ரீஹயக்கிரீவர் சன்னதி, தன்வந்தரி மற்றும் ஆழ்வார்கள் சன்னதிகள், புதிதாக அமைக்கப் பட்டுள்ளன. சொர்க்கவாசல், தெற்கு நிலை வாசல் கோபுரங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. தெப்பக்குளம், சுற்றுப்பிரகாரம் முழுவதும் கற்கள் பதித்தல், உற்சவர் சிலைகள், நந்தவனம், கலையரங்கம், மதில் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. மூலவர் விமானம், பரிவார மூர்த்திகள் விமானங்கள், ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகின்றன.
இக்கோவில் கும்பாபிஷேகம், டிச., 1ல் நடக்கிறது. இதற்கான யாக பூஜை, நவ., 28ல் துவங்குகிறது. டிச., 1ம் தேதி காலை 9.47க்கு மூல விமா னங்களுக்கு கும்பாபிஷேகம், 10.22 மணிக்கு மூலவர்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.யாக பூஜைக்கு, 22 வேதிகைகள் மற்றும் 36 யாக குண்டங்களுடன் யாக சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான கால்கோள் விழா, வரும் 26ம் தேதி நடக்கிறது. மேலும், 108 திவ்ய தேசங்களில் இருந்து புனித மண் மற்றும் தீர்த்தங்கள் எடுத்து வரப்படுகிறது. இதற்காக, நான்கு யாத்ரீகர்கள் குழு அமைக்கப்பட்டு, அக்குழு வரும் 23ல் புறப்பட்டுச் செல்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.