பதிவு செய்த நாள்
23
அக்
2014
02:10
ராசிபுரம்: ராசிபுரம் மாரியம்மன் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா, நேற்று, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ராசிபுரம் மாரியம்மன் கோவிலில், ஐப்பசி மாத தேர்த்திருவிழா, பூச்சாட்டுதலுடன், நேற்று துவங்கியது. கைலாசநாதர் கோவிலில் இருந்து மாரியம்மன் ஸ்வாமி உற்சவர், சப்பரத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்று, செல்லாண்டியம்மன், பட்டதுளசி அம்மன் கோவில்களுக்கு சென்று, அதன்பின், மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்த மலர்களை, மாரியம்மன் ஸ்வாமி மீது தூவி பூச்சாட்டினர். தொடர்ந்து, ஸ்வாமி பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று (அக்., 23) இரவு, 8 மணிக்கு கம்பம் நடும் விழா நடக்கிறது. பல்வேறு கட்டளைதாரர்கள் சார்பில், ஸ்வாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வரும், நவம்பர், 3ம் தேதி இரவு, பூவோடு பற்ற வைத்தல் நிகழ்ச்சியும், அடுத்த நாள் அதிகாலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 4ம் தேதி இரவு கொடியேற்று விழா நடக்கிறது.