பதிவு செய்த நாள்
24
அக்
2014
02:10
ஈரோடு: கருங்கல்பாளையம் ராகவேந்திர ஸ்வாமி கோவிலில், நேற்று லட்சுமி குபேர பூஜை நடந்தது. ஈரோடு காவிரிக்கரையில் அமைந்துள்ள ராகவேந்திர ஸ்வாமி கோவில், பரிமள மண்டபத்தில் ஆண்டுதோறும் தீபாவளியை ஒட்டி வரும், அமாவாசை தினத்தன்று லட்சுமி குபேர பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு, தீபாவளியன்று வராமல், அதற்கு அடுத்த நாள் அமாவாசை திதி அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை, ஒன்பது மணிக்கு ஸ்ரீசுத்த ஹோமம், புருஷ சுத்த ஹோமம், ராகவேந்திர அஷ்டோத்திர ஹோமம், ஸ்ரீலட்சுமி குபேர பூஜைகள் நடந்தது.இதில், ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.ஹோம சேவா சங்கல்பத்தில் தம்பதியினராக பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஈரோடு ராகவேந்திர சேவா சமிதி செய்து இருந்தது.* இதே போல், ஈரோட்டில் வட இந்தியர்கள், நேற்று தீபாவளி மற்றும் மகாலட்சுமி பூஜையை கொண்டாடினர். அமாவாசை தினமே, தீபாவளியாக வட இந்தியர்கள் கொண்டாடுகின்றனர். இதற்காக வாழை மரம், மாவிலை, செவ்வந்தி பூ, கரும்பு, மாங்கல்யம், வளையல், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டன. இவற்றை வட இந்தியர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.