பதிவு செய்த நாள்
24
அக்
2014
02:10
சத்தியமங்கலம் :நேற்று அமாவாசையை முன்னிட்டு, பண்ணாரி கோவிலில், பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி. இங்குள்ள மாரியம்மன், தமிழக, கர்நாடக மாநில பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும், பங்குனியில் வரும் உத்திர நட்சத்திரம் அடுத்து வரும் செவ்வாய்கிழமை, இங்கு குண்டம் திருவிழா நடக்கும். இந்த விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதிப்பது வழக்கம்.நேற்று, ஐப்பசி மாதம் அமாவாசையை முன்னிட்டு, பண்ணாரி கோவிலில் அதிகாலை, ஆறு மணிக்கே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மதியம் உச்சிகால பூஜை நேரத்தில், கோவில் வளாகத்தை சுற்றிலும் பக்தர்கள் நீண்ட வரிசையாக நின்று, அம்மனை தரிசனம் செய்தனர்.நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், தங்க கவசத்தில் பக்தர்களுக்கு, அம்மன் அருள் பாலித்தார். நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், கோவில் நிர்வாகம் சார்பில், அம்மனுக்கு சாற்றப்பட்ட பட்டு புடவைகள், பக்தர்கள் முன் ஏலம் விடப்பட்டது. இந்த புடவைகளை ஏலம் எடுக்க பக்தர்கள் ஆர்வம் காட்டினர்.