இம்மானுடர் என்றும் எம்முன்னே வந்தால் இமைப்போதில் மாந்தர் கரையேறி உய்வார் கைம்மான் பரன் தந்த அம்மான் குகன்தான் சொல்வான் கடல்மோது கோயில் வளர்ந்தே.
அலைமோதி மோதி அடங்கும் அதேபோல் நிலைகெட்டு மாந்தர் தறிகெட்டு ஓட அலைபோல ஆட்டும் விதி என்முன் மங்கும் மலைமங்கை பாலன் இதைச் சொல்வான் போலும்.
சகம்தந்த வெற்பில் சுகந்தப் பொருப்பில் உவந்தேறினால் கீர்த்தி சிலம்பேறுவார்கள் குகன் சொல்லவென்றே அவன் வாழும்வெற்பே சுகந்தபிராட்டி மகன் கந்த வெற்பே.
வினைக்காடு மாய்க்கும் இருட்பாடு தேய்க்கும் தனைத்தான் விளக்கும் தனிப் பேறளிக்கும் முனிக்கூட்டம் மொய்க்கும் மூதறிவாளர் துய்க்கும் பனிக்காட்டுப் பௌவத் தனிக் கோயில் வாழ்வான்
கண்கந்தன் ரூபம் காதுன்றன் கீர்த்தி வாய்கந்தன் காதை கைகந்தன் தொண்டு எண்சாண் உடம்புன் திருப்பாத சேவை என்செய்கையாவும் உன்மயமே ஆக,
முனிக்கும்பலுக்குக் கணக்கற்ற நன்மை வரம்பின்றி ஈயும் பலதெய்வம் கோடி குறவர்க்கும் மறவர்க்கும் பரவர்க்கும் முக்தி தரும் தனிப்பெருந்தெய்வம் குகன் அன்றி யாரோ.