பதிவு செய்த நாள்
30
அக்
2014
12:10
உடுமலை : பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி கோவில், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில்களில், சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடந்தது. மடத்துக்குளம், பாப்பான்குளத்தில் உள்ள ஞானதண்டபாணி கோவில், உடுமலை, பழநி ரோட்டில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவில்களில் கந்தசஷ்டி பெருவிழா, சிறப்பு வழிபாடுடன் துவங்கியது. தினமும் காலையில் சிறப்பு அபிேஷகம், அலங்காரமும் மாலையில் உற்சவர் வீதியுலாவும் நடந்தது. ஞானதண்டாயுதபாணி கோவிலில், நேற்று மாலை 4.00 மணிக்கு, வீரவேல் முருகன் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். வெற்றிவேல் முன் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கிழக்கு திருமுற்றத்தில் வெற்றி வாகை சூடப்பட்டது; மயில்வாகனம், சேவல் கொடி ஏற்றப்பட்டது. இரவு 7.30 மணிக்கு, மகா தீபாராதனையும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள சுப்பிரமணியசுவாமி, சன்னதியில் நேற்று காலை 8.30 மணிக்கு, யாகசாலை வேள்வி பூஜையும், பிற்பகல் 3.15 மணிக்கு வேல்வாங்கும் உற்சவமும், மாலை 4.00 மணிக்கு, சுவாமி புறப்பாடும், சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு, மகா அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று திருக்கல்யாண உற்சவம் : கந்தசஷ்டி பெருவிழா நிறைவு நாளான இன்று பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி கோவில் மற்றும் உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில்களில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதையடுத்து ஞானதண்டாயுதபாணி கோவிலில் இன்று காலை 7.00 மணிக்கு, தீபாராதனையும் 11.00 மணிக்கு, உச்சிகால அபிேஷகம், ஆறாட்டு உற்சவமும் நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு, ஊர் விநாயகர் கோவிலில் இருந்து திருமண சீர் வரிசைகள் கொண்டுவரப்பட்டு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு 9.15 மணிக்கு, திருக்கல்யாண கோலத்தில் சுவாமி வீதியுலா, விருந்து, ஊஞ்சல் வசந்தவிழா நடக்கிறது.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு 7.00 மணிக்கு, வெள்ளி ரதத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட், சக்தி விநாயகர் கோவிலில் உள்ள சுப்பிரமணியசுவாமிக்கு இன்று காலை 8.00 மணிக்கு அபிேஷகம், அலங்காரமும், 8.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமிக்கு அர்ச்சனையும், காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணமும், மாலை 6.00 மணிக்கு, சுவாமி வீதியுலா நடக்கிறது.