பதிவு செய்த நாள்
30
அக்
2014
02:10
வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான, 5.96 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்த, சமூகநல துறை இதுவரை, 50 லட்சம் ரூபாயை பாக்கி வைத்துள்ளது. இதையடுத்து, சமூகநல துறையை ஆக்கிரமிப்பாளராக அறிவித்து, அந்த நிலத்தை மீட்பதற்கு அறநிலைய துறை தயாராகி வருகிறது. சென்னை வடபழனி குமரன் காலனி பகுதியில், வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான, 5.96 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை கடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்தில் சமூகநல துறை சார்பில், பணிபுரியும் மகளிருக்கான விடுதி கட்ட, 29 ஆண்டுகள் குத்தகையில் பெறப்பட்டது. இதற்கு அப்போதே பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதில் ஒரு பகுதி நிலத்தில், சமூகநல துறை சார்பில், மகளிர் விடுதி கட்டப்பட்டு, 2010ம் ஆண்டு திறக்கப்பட்டது. அந்த வளாகத்தில் மீதியுள்ள நிலத்தில், புதிய கட்டடங்கள் கட்டும் திட்டங்களையும் சமூக நலத்துறை கிடப்பில் போட்டுவிட்டது.
தினமலர் செய்தி எதிரொலி: இதனால், அந்த நிலம் முறையாக பராமரிக்கப்படாமல், கட்டட கழிவுகள் கொட்டப்படும் இடமாக மாற்றப்பட்டு வந்தது. இதுகுறித்து, தினமலர் நாளிதழில், கடந்த 16ம் தேதி வெளியானது. இதையடுத்து அந்த நிலம் தொடர்பான தற்போதைய நிலவரங்களை அறநிலைய துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத அறநிலைய துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: குமரன் காலனி பகுதியில், சமூகநல துறைக்கு 5.96 ஏக்கர் நிலம், மாதம் 1 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில், 2010ம் ஆண்டு குத்தகை வழங்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் போட்டது முதல், இப்போது வரை சமூகநல துறை குத்தகை தொகையை ஒருமுறை கூட செலுத்தவில்லை. 50 லட்சம் ரூபாய்க்கு மேல் குத்தகை தொகை நிலுவையில் உள்ளது.
நடவடிக்கை: இதனால் குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக, சமூகநல துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால், அவர்களிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை.எனவே, குத்தகை தொகை எதுவும் செலுத்தாமல் வடபழனி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்தி வரும், சமூகநல துறையை ஆக்கிரமிப்பாளராக அறிவித்து, அந்த நிலத்தை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -