பதிவு செய்த நாள்
18
நவ
2014
02:11
ஒருவர் தன் தேவையை கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால், அல்லாஹ் அவர் கேட்டதை தந்து விடுகின்றான். அல்லது அவருடைய வேறு தேவையை பூர்த்தி செய்கின்றான். அல்லது இப்போது வைத்த கோரிக்கையை அவருக்காக மறுமையில் சேகரித்து வைக்கின்றான். இப்படியாக, பிரார்த்தனை என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.துஆ எனப்படும் பிரார்த்தனை செய்யும்போது ஒழுங்குமுறைகளையும் துõய்மையையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அசுத்தமான உணர்வுகள், தவறான எண்ணங்கள் ஆகியவற்றை விட்டு இதயத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.குர்ஆனில் ‘...திண்ணமாக, அல்லாஹ் தீமையிலிருந்து விலகி இருப்பவர்களையும், துõய்மையை மேற்கொள்பவர்களையும் நேசிக்கின்றான்’ எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, மனநிலையை துஆவின் போது சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதின் அவசியம் புரிகிறது.துஆவை தொடங்கும் போது முதலில் அவரவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். அடுத்து பிறருக்காக பிரார்த்திக்க வேண்டும். குர்ஆனில் இப்ராஹிம் (அலை) அவர்கள், நுõஹ் (அலை) அவர்கள் ஆகியோரின் பிரார்த்தனைகள் இடம் பெற்றுள்ளன.
‘என் இறைவா! தொழுகையை நிலை நிறுத்துபவனாய் என்னை ஆக்குவாயாக. என் வழித் தோன்றல்களில் இருந்தும் தொழுகையை நிலை நாட்டுபவர்களை தோற்றுவிப்பாயாக. எங்கள் இறைவனே! மேலும், எனது இந்த பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக. எங்கள் இறைவனே! எனக்கும், என் பெற்றோருக்கும், நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளில் மன்னிப்பை அருள்வாயாக’ என்ற இப்ராஹிம் (அலை) அவர்களின் பிரார்த்தனை படி, முதலில் தனக்காகவும் பிறகு மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வதை உற்று நோக்க வேண்டும். பிரார்த்திக்கும் போது குறுகிய நோக்கம் கூடாது. சுயநலத்துடன் செய்யும் பிரார்த்தனையால் பயன் இல்லை.ஒருமுறை ஒரு கிராமவாசி மதீனாவில் உள்ள பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார். ‘இறைவா! என் மீதும், நபிகள்நாயகம் மீதும் மட்டும் கருணை புரிவாயாக! மேலும், எம் இருவரைத்தவிர வேறு எவர் மீதும் கருணை பொழியாதே’ என பிரார்த்தித்தார். இதனைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,‘இறைவனின் பரந்த கருணையை நீர் குறுகியதாக செய்து விட்டீர்’ என்றார்கள். எனவே, தொழுகையின் போது சுத்தமான பரந்த மனதுடன் துஆ செய்யுங்கள்.