கோயிலில் மருத்துவ வசதி: முன்னாள் மேல்சாந்தி கருத்து!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2014 01:11
சபரிமலை: சபரிமலையில் சீசன் அல்லாத நேரங்களிலும் டாக்டர் தங்கி இருந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வது அவசியம், என்று முன்னாள் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி தெரிவித்தார். சபரிமலை சன்னிதானத்தில் மேல்சாந்தி மற்றும் சில ஊழியர்கள், பாதுகாப்பு போலீசார் ஆண்டு முழுவதும் தங்கி இருப்பர். கார்த்திகை முதல் தேதி பொறுப்பேற்கும் மேல்சாந்தி, ஓராண்டு வெளியே எங்கும் செல்லாமல் அங்கு இருக்க வேண்டும் என்பது நடைமுறை. இந்த முறை பணிநிறைவு பெற்று சொந்த ஊருக்கு புறப்பட்ட மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நிருபர்களிடம் கூறியதாவது: ஆறு மாதங்களுக்கு முன்பு சீசன் அல்லாத நேரத்தில், அரவணை தயார் செய்யும் யூனிட்டில் உள்ள ஊழியர் ஒருவரை காட்டுப்பன்றி தாக்கியது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க சன்னிதானத்தில் மருத்துவ வசதி இல்லை. அவரை பம்பைக்கு சுமந்து சென்று அங்கிருந்து 50 கி.மீ., தூரத்தில் உள்ள பத்தனம்திட்டாவில் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தோம். அதுபோன்று தங்கியிருந்த ஊழியர்கள் சிலரும் நோய்வாய்ப்பட்டனர். எனவே சன்னிதானத்தில் ஆண்டு முழுவதும் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும். அங்கேயே தங்கியிருக்குமாறு டாக்டர் ஒருவரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.