நாகர்கோவில்: கன்னியாகுமரியில் நடந்த ஏக்நாத் ரானடே நூற்றாண்டு விழா ஊர்வலத்தில் ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள பாறையில் விவேகானந்தர் மண்டபத்தை நிறுவியவர் ஏக்நாத் ரானடே. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். அவரது நூற்றாண்டு விழா நேற்று முதல் ஒரு ஆண்டுக்கு நாடு முழுவதும் கொண்டாட விவேகானந்தா கேந்திரம் முடிவு செய்துள்ளது. கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் தியான சிலை முன்பிருந்து பள்ளி மாணவர்களின் ஊர்வலம் புறப்பட்டது. டி.எஸ்.பி., செல்வராஜ் தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்று விவேகானந்தா கேந்திரத்தை அடைந்தது. சுவாமி சக்தி சைதன்யானந்தஜி மகராஜ், விவேகானந்தா கேந்திரா துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், நிவேதிதா, பொருளாளர் அனுமந்தராவ், நூற்றாண்டு விழா கமிட்டி தலைவர் தாணுமாலைய பெருமாள், கவுரவ தலைவர் பத்மனாபன், செயலாளர் அருண்குமார், பொருளாளர் கோபி, தொண்டர் கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி கலந்து கொண்டனர்.