பதிவு செய்த நாள்
26
நவ
2014
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெருவிழாவினை தொடங்குகின்றபோது ஆகம விதிப்படி திருக்கோயிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்கப்படும், அதன்படி கார்த்திகை தீப திருவிழாவின் முதல்நாள் விழா, இன்று ( 26ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விநாயகர், சமேத முருகர் வள்ளி தெய்வானை, சமேத அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர், ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளும் தங்க கொடி மரத்தின் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர், அதனை தொடர்ந்து சுவாமிநாத குருக்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க , ஓதுவார்கள் தேவாரம் பாட, மங்கல இசைசயுடன் 72 அடி உயர கொடிமரத்தில் காலை 6.40க்கு விருச்சிக லக்னத்தில் கொடி ஏற்றப்பட்டது.
அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். விழாவில் தமிழக வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கலெக்டர் ஞானசேகரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் செந்தில்வேலவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து முதல் நாள் விழாவில் காலை 10மணி அளவில் பஞ்ச மூர்த்திகளான, விநாயகர், முருகர், அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர், ஆகியோர் கண்ணாடி விமானத்தில் வீதி உலா வருவர். பின் இரவு 10மணிக்கு மேல் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும் நிகழ்ச்சியில் இதில் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சமேத வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், சமேத அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் அதிகார நந்தி வாகனத்திலும், பராசக்தி அம்மன் ஹம்ச வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சின்ன ரிஷப வாகனத்திலும் வீதி உலா வருவர்.
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகம், 9 கோபுரங்களும், கோயிலில் உள்ள அனைத்து சந்நதிகளும், தங்க கொடிமரம், தல விருட்சமான மகிழ மரம், ஆகியவை வண்ண மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளன. திருவண்ணாமலை நகரமே விழா கோலம் பூண்டுள்ளன. வரும் டிசம்பர் 1ம் தேதி ஆறாம் நாள் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவில் ஸ்வாமி வெள்ளி ரதத்திலும், பராசக்தி அம்மன் இந்திர விமானத்திலும் வீதி உலா வருவர். வரும் டிசம்பர் 2ம் தேதி தேரோட்டத்தில் அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையம்மன் 63 அடி உயரமுள்ள மஹா ரதத்திலும், பஞ்ச மூர்த்திகள் தனித்தனி தேரில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். வரும் டிசம்பர் 5ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை மீது மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.