பதிவு செய்த நாள்
26
நவ
2014
10:11
அன்னுார் : அன்னுாரில், 51 கிலோ மிளகாய் பொடியை, நீரில் கரைத்து குளித்த சாமியாரை காண பக்தர்கள் திரண்டனர். வேலுாரில் 80 வயது மதிக்கத்தக்க சாமியார் ஒருவர், 31 கிலோ மிளகாய் பொடியை நீரில் கரைத்து குளித்து, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். தகவலறிந்து அன்னுார், பட்டறையை சேர்ந்த செல்வராஜ் என்பவர், அந்த சாமியாரை தனது வீட்டுக்கு இருவாரங்களுக்கு முன் வரவழைத்தார்.
சாமியாரின் அறிவுரைப்படி அப்பகுதியில் சண்டிஹோமமும், பிரத்யங்கராதேவி யாகமும் நேற்று நடந்தது. இதில், மூன்று பெரிய பாத்திரங்களில், 51 கிலோ மிளகாய் பொடி போட்டு, நீர் ஊற்றி கரைக்கப்பட்டது. பின், இந்த கரைசல் சாமியார் மீது ஊற்றப்பட்டது. மிளகாய் பொடி கரைசலால், அப்பகுதி முழுவதும் நெடி தாங்க முடியவில்லை. மூன்று பாத்திரம் மிளகாய் கரைசல் ஊற்றப்பட்ட போதும், எந்த அசைவும் இன்றி சாமியார் குளியலை முடித்தார். அதன்பின் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சிலருக்கு அருள்வாக்கு தெரிவித்தார்.
சாமியார் பேசியதாவது:இரண்டு ஆண்டுகள் நடந்தே நேபாளத்திற்கு சென்றேன். பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய தலங்களுக்கும் சென்று வந்துள்ளேன். தாயை மதிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தொடர்ந்து ஆறு மாதங்கள் வெறும் மண்ணை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்தேன். மழை பெய்ய குலதெய்வ வழிபாடு அவசியம்.இவ்வாறு, அவர் பேசினார்.சாமியார் தனது பெயரை விஜயகுமார் என்கிற அழுக்குச்சாமியார் என்கிற மிளகாய் சித்தர் என கூறிக் கொண்டார். மிளகாய் கரைசலில் சாமியார் குளிக்கும் தகவலறிந்து, ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர்.