பதிவு செய்த நாள்
11
டிச
2014
03:12
திருமுகங்கள் ஓரைந்தும் சீர்க்கரங்கள்
ஈரைந்தும் தெரியா வாக்கி,
ஒருமுகமும் இருகரமும் உயர்தண்டும்
வேலும்காட் டுணர்வின் மூர்த்தி,
பெருமுனிவர் அமரர்நரர் தொழக்கொங்கர்
பழநியுறை பெருமை, தொண்டை
வருசாளிக் கிராமத்து வடபழனி
யாண்டவனாய் வதிந்து காட்டும்.
-அஷ்டாவதானம் பூவை ஸ்ரீகலியாணசுந்தரயதீந்திரர்
சகோதரன் விநாயகனுடனான போட்டியில் வெற்றிக் கனியான மாம்பழம் தனக்குக் கிடைக்கவில்லையே கனியான மாம்பழம் தனக்குக் கிடைக்கவில்லையே என்கிற கோபத்தில் கயிலங்கிரியை விட்டுப் புறப்பட்ட முருகப் பெருமான் குடிகொண்ட மலை- பழநி. இந்தக் கதையைப் புராணம் தெளிவாகவே சொல்லும். பழம் நீ என்று ஔவைப் பிராட்டியார் முருகனை ஆறுதல்படுத்திப் புகழ்ந்தமையால், இந்த மலை பழநி மலை ஆனது. எத்தனையோ மலைகளில் முருகப் பெருமான் கோயில் கொண்டிருந்தாலும், அவற்றுள் பழநிக்கு அதிக மகத்துவம் உண்டு.
புராதனமான இந்தக் கோயில் தென்தமிழ்நாட்டில் இருப்பதால், தென்பழநி என்பர். இதே முருகப் பெருமான். சென்னைக்கு அருகே வடபழனியிலும் குடி கொண்டிருக்கிறார். இந்த ஆலயத்தைத் தரிசித்திருக்கும் பலருக்கும். ஆலயம் உருவானதன் பின்னணி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
முதலில், தென்பழநி ஆலயத்தின் சிறப்பு பற்றி சுருக்குமாகக் காண்போம். தொண்டை மண்டலத்தில் சிவகிரி என்னும் மலைமீது கோலோச்சிக் கொண்டிருக்கும் முருகப் பெருமான் தண்டபாணி என்றும் பழநி ஆண்டவர் என்றும் வணங்கப்பட்டு வருகிறார். நவபாஷாணங்களால் ஆன முருகப் பெருமானைப் பழநியம்பதியிலே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்கிற ஆசை, சித்த புருஷர்களுக்கு ஏற்பட்டது. எனவே சித்தர்களுக்கெல்லாம் குருவான ஸ்ரீஅகத்திய முனிவரைச் சந்தித்துத் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர், அப்போது அவர்களிடம் அகத்தியர், போகரைக் கலந்தாலோசிப்போம். அவரது எண்ணத்தை அறிந்து அதன் பின் பிரதிஷ்டை செய்வோம் என்று சொல்ல, போகர் அங்கே வரவழைக்கப்பட்டார்.
கலியுக மக்களின் நன்மைக்காக நாம் இந்தத் திருமேனியை இங்கே பிரதிஷ்டை செய்வோம். அந்தத் திருமேனி. கல்லால் இருக்கக்கூடாது. பாஷாணம் எனப்படும் தேர்ந்த மூலிகைகளைக் கொண்டு வடிவமைப்போம். இங்கே கூடி இருக்கிற எண்பத்தோரு சித்தர்களும் ஆளுக்கொரு பாஷாணத்தைத் தயார் செய்வோம், அந்தக் கலவையைக் கொண்டு முடிவாக முருகப் பெருமானின் விக்கிரகத்தை நான் இங்கே பிரதிஷ்டை செய்கிறேன் என்று போகர் சொல்ல.... அனைவரும் ஆனந்தம் கொண்டனர்.
அதன்படி எண்பத்தோரு சித்த புருஷர்கள். தங்களது நவ வலிமையால் ஆளுக்கு ஒரு பாஷாணத்தைத் தயாரித்தனர். முடிவில், இந்த எண்பதோரு பாஷாணத்தைக் கொண்டு போகரால் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை ஆனதே பழநி தண்டாயுதபாணி வடிவோம். போகர் பிரதிஷ்டை செய்த இந்தத் திருமேனியைப் பின்னாளில் அவரது வாரிசான புலிப்பாணிச் சித்தர் வழிபட்டு. பூஜை முறைகளை உருவாக்கினார். அவரைத் தொடர்ந்து அவருடைய வழித்தோன்றல்களான பண்டாரங்கள் எனப்படும். பூஜகர்கள் இன்றைக்கும் அந்த தண்டாயுதத் திருமேனியை ஆராதித்து வருகின்றனர்.
தென்பழநியில் ஆட்சி செலுத்திய முருகப் பெருமான் வடபழனியிலும் கோலோச்ச விரும்பியது, சில நூறு ஆண்டுகளுக்கு முன், போகரும் புலிப்பாணியும் தொடங்கிய தென்பழநித் திருப்பணியை, வடபழனியில் தொடர்வதற்கு முருகப் பெருமான் தேர்ந்தெடுத்து மூன்று மாபெரும் சித்த புருஷர்களை. அவர்கள்-அண்ணாசாமி தம்பிரான். ரத்தினசாமி தம்பிரான், பாக்கியலிங்க தம்பிரான் போன்றோர் ஆவர். இந்த மூன்று சித்புருஷர்களின் முயற்சியால்தான் வடபழனி ஆண்டவர் ஆலயமே உருவானது; புகழ் பெற்றது. இந்த ஆலயத்தில் ஒரு விசேஷம் என்றால், பிரமாண்டமான முறையில் அதைக் கொண்டாடி, முருகனை ஆராதிப்பதற்காக இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கே கூடுகிறார்கள்.
இதற்கெல்லாம் காரணமாக விளங்கும் இந்த மூன்று சித்புருஷர்களின் வரலாற்றை அறிவோமா?
அண்ணாசாமி தம்பிரான்:
வடபழனிக்கு அருகே சாலிகிராமத்தில் பிறந்தவர் அண்ணாசாமி நாயக்கர். பாலகனாய் இருந்தபோது படிக்கப் போன இடத்தில் பாடம் மனதில் பதியவில்லை, பக்தி வேரூன்றியது. கோடம்பாக்கத்தில் இருக்கும் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் கோயிலுக்கு மாலைப் பொழுதில் சென்று விடுவார். நாட்கள் ஓடின. இல்லறம் அழைத்தது. பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் நடந்தேறியது. இனிய இல்லறம் இரு மகவை ஈன்றெடுத்துத் தந்தது.
இந்த நேரத்தில்தான் அண்ணாசாமி பெரும் நோயால் பாதிக்கப்பட்டார். தீராத வயிற்று வலி திடீரென அவரைத் தொற்றிக்கொண்டது. கைவைத்தியம் பலன் தர வில்லை, தேர்ந்த மருத்துவர்களின் முயற்சியும் தோற்றுப்போனது, படாத பாடு பட்டார் அண்ணாசாமி நாயக்கர். தான் வணங்கும் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரரிடமே உபாதை தீர வேண்டினார். இதைத்தீர்க்கும் மாபெரும் பொறுப்பைத்தகப்பன் ஆனவன். தனயனிடமே விட்டுவிட்டான் போலிருக்கிறது, முருகப் பெருமான். அண்ணாசாமி நாயக்கரை ஆட்கொண்ட விதம் இப்படிதான்.
ஒரு நாள் மாலை வேளையில் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தை அண்ணாசாமி வலம் வந்து கொண்டிருந்தபோது. வயிற்று வலி திடீரென அதிகரித்தது. ஓ வென்ற அலறலுடன் பிராகாரத்திலேயே துவண்டு சரிந்தார். தென்பழநியில் இருந்து பாதாயாத்திரையாக வந்த ஒரு துறவி, துவண்டு விழுந்த அண்ணாசாமியைக் கண்டார். அகத்தில் அருளும் முகத்தில் பொலிவுமாகக் காணப்பட்ட அந்தத் துறவி, அண்ணாசாமியின் அருகே சென்று அவரது வயிற்றில் பழநி ஆண்டவரின் திருநீறை மருந்தாகத் தடவினார். துவண்ட நிலையில் இருந்தவர். கண்களைத் திறந்து பார்த்தார். துறவி புன்னகைத்தார். தன் பிரச்சனையைத் தெரிவித்தார் அண்ணாசாமி. அப்பனே.... கலியுகத்தில் மருத்துவக் கடவுளாக விளங்கும் பழநிக்குச் செல். தண்ட பாணியிடம் தண்டனிட்டு உன் குறை சொல். அவனே உன் குறை தீர்க்க வல்லான் என்றார்.
அண்ணாசாமிக்கு அழாத குறை. பின்னே.... அந்த காலத்தில் - அதுவும் இத்தகைய ஒரு நோயோடு ஒருவர் பழநிக்குச் சென்று திரும்புவது என்பது சாமான்யமா? எனவே, துறவியே.... இந்த வயிற்று வலியையும் உடன் வைத்துக் கொண்டு பழநிக்கு என்னால் செல்ல இயலாது. வேறு உபாயம் கூறுங்கள் என்றார். சரி.... மூன்று கிருத்திகை தினங்களில் தொடர்ந்து திருப்போரூர் சென்று முருகனை வழிபடு. நான்காவது கிருத்திகை தினத்தன்று திருத்தணிகை சென்று வா. மறவாமல், திருத்தணிகையில் உயர்ந்தோர் காணிக்கை செலுத்து என்று அருளிச் சென்று விட்டார்.
துறவி சொன்னபடி, கடும் வயிற்று வலிக்கு இடையிலும் திருப்போரூருக்கு நடைப்பயணமாகவும் படகிலும் சென்றார் அண்ணாசாமி. தவிர, ஒரு முறை கடும் மழையின் காரணமாக படகுப் போக்குவரத்து இல்லாமல் ஆற்றில் நீந்தியும் சென்று முருகனை வழிபட்டார். மூன்றாவது முறை முருகனை வழிபட்டுத் திரும்பும்போது அசதியின் காரணமாகவும் மிகுதியான மழையின் காரணமாகவும் திருப்போரூருக்கு அருகே கண்ணாப்பேட்டையில் சிதம்பரம் சுவாமிகளின் சந்நிதியின் அருகே சற்று கண்ணயர்ந்தார். அப்போது ஒரு கனவு.... ஒரு பெரியவர் தோன்றி, ஏனப்பா.... மழையிலும் புயலிலும் முருகனைத் தேடி வருகிறாயே... நீ இருக்கும் இடத்திலும் அவன் இருக்கிறானே..... அங்கேயே அவனை வழிபடலாமே....? என்று சொல்லி மறைந்தார்.
முருகனே தனக்கு இட்ட உத்தரவாக இதைக் கருதி, சென்னையில் தான் இருக்கும் இடத்தை விட்டு அகலாமல், தினமும் முருகனை வழிபடலானார். இந்த நேரத்தில் நான்காவது கிருத்திகை தினமும் நெருங்கியது. அப்போதுதான் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் கோயில் பிராகாரத்தில் பாத யாத்திரையாக வந்து தனக்கு அருளிய துறவி நினைவுக்கு வந்தார். ஆஹா,,,,, நான்காவது கிருத்திகை தினத்தின்போது திருத்தணிகை சென்று உயர்ந்ததோர் காணிக்கை செலுத்து என்று எனக்குச் சொன்னாரே என்று தெளிந்து பரவசமானார், அண்ணாசாமி.
துறவியின் திருவாக்குபடி திருத்தணிகை புறப்பட்டு அடைந்தார். அண்ணாசாமி திரளான பக்தர்களின் இடையே மால்முருகனை வணங்கினார். அவரது கண்களில் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்தது, என் துயர் தீர்க்கும் அப்பனே... வயிற்று வலியை வாங்கிக் கொள்ளப்பா என்று மனமுருகப் பிரார்த்தித்தார். அடுத்து காணிக்கை செலுத்த வேண்டுமே! உண்டியல் அருகே சென்றார். காணிக்கை அளிக்கக் கையில் காசு-பொருள் ஏதும் இல்லை. எதைச் செலுத்தவது? சட்டென்று உயர்ந்ததோர் காணிக்கை அவர் நினைவுக்கு வந்தது. உன் திருப்புகழைப் பாடத் தெரியாத என் நாக்கையே அறுத்து உனக்குக் காணிக்கையாகச் செலுத்துகிறேன். என்று பித்துப் பிடித்தவர் போல் அலறி கையில் இருந்த சிறு கத்தியின் உதவியால், நாக்கை முழுவதுமாகத் துண்டித்து உண்டயலில் இட்டார் (பலிபீடத்தின் அருகே ஓர் இலையில் வைத்துக் காணிக்கை செலுத்தினார் என்று சொல்வர்). வாயில் இருந்து வரும் ரத்தத்தையும் வந்திருக்கும் பக்தர்களின் பரவசத்தையும் அண்ணாசாமி சட்டை செய்யவில்லை.
முருகா..... முருகா... என்று குழறியபடியே. கொடிமரத்தின் அருகே வேரறுந்த மரம் போல் வீழ்ந்தார். அடுத்த கணமே அதுவரை அவரைப் பீடித்திருந்த வயிற்று வலி மாயமாக மறைந்து போயிற்று. இதுதான் முருகனின் திருவருளோ! துறவி சொன்ன திருவாக்கின் மகிமை எண்ணி, மகிழ்வான மனதுடன் சென்னை திரும்பினார். தான் இருக்கும் இடத்திலேயே முருகப் பெருமானின் திருவுருவப் படத்தை வைத்து வழிபட ஆரம்பித்தார். விரைவிலேயே அவரது நாக்கும் மெள்ள மெள்ள வளர்ந்து. பழைய நிலையை அடைந்தார்.
முருகனின் பாடல்களைத் திறம்படக் கற்றார். சிறு வயதில், புத்தியில் ஏறாத அந்த அரும் பாக்கள். முருகனின் அருளால், வெகு விரைவிலேயே இவருக்கு வசமாயின. அண்ணாசாமியின் புகழ் திக்கெட்டும் பரவியது. முருகப் பெருமானின் அருள் பெற்றவர் இவர் என்று பல பக்தர்களும் இவரைத் தேடி வந்தனர். இவர் சொல்லும் வாக்கு பலிக்க ஆரம்பித்தது. குறி சொல்வதற்கென்று ஒரு மேடை அமைத்து. அங்கே முருகனின் படத்தை வைத்து வழிபட்டார். (இன்றை வடபழனி முருகன் ஆலயம் இருக்கும் இடம் இதுதான்). சாதாரணமாக இருந்த அண்ணாசாமி அண்ணாசாமி தம்பிரான் ஆனார்.
பழநிக்குச் செல்ல ஒரு நேர்த்திக் கடன் இருக்கிறதே என்று ஒரு கட்டத்தில் உணர்ந்த அண்ணாசாமி தம்பிரான், பாத யாத்திரையாகப் புறப்பட்டார். மலை மேல் அருளும் தண்டாயுதபாணி தெய்வத்தை வணங்கினார். கிரிவலம் வந்து தொழுதார். வலம் முடிந்து அடிவாரம் வந்ததும். ஒரு படக் கடையில் பழநி ஆண்டவரின் அற்புதக் கோலத்தைக் கண்டார். அந்தப் படத்தைத் தான் வாங்க வேண்டும் என்று அவரது உள்ளுணர்வு சொன்னது. ஆனால் அதை வாங்குவதற்கு அவரிடம் காசு இல்லை. கேட்டுப் பார்த்தார் கடைக்காரரிடம் காசு இல்லாமல் கலிகாலத்தில் யாராவது பொருள் தருவார்களா? தம்பிரானைக் கடைக்காரர் துரத்தி அனுப்பிவிட்டார்.
அந்தத் திருவடிவ நினைப்பிலேயே சோகமயமாக வந்தவர், இருள்வேளையில் ஒரு நெல்லி மரத்தடியில் தூங்கிப் போனார். பொழுது புலர்ந்தது, முருகனின் திருவுருவப் படத்தை வாங்கக் கூட எனக்கு வக்கில்லையே என்று கவலையில் கண்ணீரும் கம்பலையுமாக இரவில் படுத்ததால். அவரது முகம் ஏகத்துக்கும் வீங்கிப் போயிருந்தது. கதிரவன் கதிர்களின் சூடு தன் மேல் பட்டத்தும் திடுக்கிட்டு வழித்தார். எழுந்து உட்கார்ந்தார். கண்ணெதிரே. ஆச்சரியம்....
தம்பிரானால் நம்ப முடியவில்லை. முந்தைய தினம் இரவு. எந்தப் படத்தைக் காசு இல்லாமல் ஒரு கடைக்காரரிடம் கேட்டாரோ. அந்தக் கடைக்காரர் இவருக்கு அருகே, அதே படத்துடன் பவ்யமாக அமர்ந்திருந்தார். தம்பிரான் பேச ஆரம்பிப்பதற்கு முன் கடைக்காரரே முந்திக்கொண்டு, சாமீ.... நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது, நேத்து ராத்திரி மலை மேல் உள்ள ஆண்டவர் என் கனவில் வந்து உங்ககிட்ட இந்தப் படத்தை கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டார். நீங்க காசு எதுவும் தர வேண்டாம். இதை வாங்கிக்கிட்டாதான் நான் வியாபாரத்துக்கப் போக முடியும் என்றான் பவ்யமாக.
பழநிப் பெருமானின் திருவிளையாடலை நினைத்து வியந்த தம்பிரான் அதைப் பெற்றுக் கொண்டார். கிடைத்தற்கரிய பொக்கிஷம் தன்னைத் தேடி வந்தது போல் அதைச் சுமந்து கொண்டு சென்னை திரும்பினார். தான் குறி சொல்லும் கோடம்பாக்கம் மேடையில் ஒரு குடிசை போட்டு அதனுள் இந்தப் படத்தை வைத்தார். தென்பழநியில் இருந்து வந்த நீ.
இன்று முதல் வடபழனி ஆண்டவர் என்று அழைக்கப்படுவாய் என்று மன முருகிப் பரவசப்பட்டார். வடபழனி ஆண்டவரின் படத்துக்குத் தினமும் புஷ்பங்கள் சார்த்தி, முருகனின் புகழ் பாடி அர்ச்சித்தார். கோடம்பாக்கத்தில் (பின்னாளில் வடபழனி) பழநி ஆண்டவர் முதன் முதலாகக் குடிகொண்ட கதை இதுதான். இந்த இடத்தில்தான் பின்னாளில் கோயில் எழும்பியது (இன்றைக்கும் வடபழனி கோயிலில் ஆதிசித்தர் பீடத்தில் இந்தப் படம் பூஜிக்கப்படுவதைத் தரிசிக்கலாம்).
ரத்தினசாமி தம்பிரான்: வடபழனி ஆண்டவரை பூஜிக்க அண்ணாசாமி தம்பிரானுக்குப் பிறகு அவருக்கு ஒரு சிஷ்யர் வர வேண்டாமா? அப்படி வந்தவர்தான் ரத்தினசாமி செட்டியார் சென்னையில் ஆயிரம்விளக்குப் பகுதியில் ஒரு மாளிகைக் கடை வைத்து நடத்தி வந்த ரத்தினசாமி செட்டியார், 1863- ஆம் வருடத்தில் முருகனுக்கு உகந்த ஒரு சஷ்டித்திநாளில்-வெள்ளிக்கிழமையில், அண்ணாசாமி தம்பிரானைத் தரிசிக்க வந்தார். வந்த காரணம்? குடும்பச் சிக்கல்தான். தன்னைத் தரிசிக்க ரத்தினசாமி செட்டியார் வந்தவுடன், அவர் எதற்காக வந்திருக்கிறார். அவரது குடும்பத்தில் உள்ள சிக்கல் என்ன என்பதையும் அதற்கான தீர்வையும் புட்டுப் புட்டு வைத்தார் அண்ணாசாமி தம்பிரான். இதில் நெகிழ்ந்த ரத்தினசாமி செட்டியார். வடபழனி ஆண்டவரின் நித்திய பூஜைக்குத் தன்னால் ஆன பொருட்களை வழங்கி இறை இன்பம் பெற்றார். குறி மேடைக்கு அடிக்கடி ரத்தினசாமி வருவதைக் கண்ட அண்ணாசாமி தம்பிரான், தனக்குப் பிறகு இந்த வழிபாடுகளைத் தொடர்வதற்கு இவரே உகந்தவர் என்று தீர்மானித்து ஒரு நாள் அவரிடம், தாங்கள் தொடர்ந்து இங்கேயே தங்கி, வடபழனி ஆண்டவருக்குத் தொண்டு செய்ய இயலுமா? என்று கேட்டார். இந்தக் கேள்வியைக் கேட்டதும் ரத்தினசாமி தடுமாறினார், ஐயா... நான் குடும்பஸ்தன். என்னால் இல்லறத்தை எப்படி விட முடியும்? என்று எதிர்க் கேள்வி கேட்டதோடு, என்றாலும் என்னால் இயன்ற தொண்டை நிச்சயம் செய்வேன் என்றார்.
பிறகு அண்ணாசாமி தம்பிரான் சரி.... இந்த வடபழனி ஆண்டவர் பல காலமாகக் கீற்று கொட்டகைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார். இவருக்கு சிறு அளவில் ஒரு கட்டடம் கட்டிக் கோயில் எழுப்ப என் உள்ளம் விழைகிறது. நீ அதற்கு உதவ முடியுமா? என்று கேட்டார். முருகப் பெருமானுக்குக் கோயில் கட்டும் பாக்கியம் எனக்கா! என்கிற பரவசத்தில் சம்மதம் தெரிவித்தார் ரத்தினசாமி செட்டியார். அதன் பிறகு பல ஆன்மிக அன்பர்களின் உதவியோடு திருப்பணிக்குப் பணம் வசூலித்தார் ரத்தினசாமி. 1865-ஆம் ஆண்டு இன்றைக்கு வடபழனி ஆண்டவர் குடி இருக்கும் மூலஸ்தானப் பகுதிக்கு முதலில் கட்டடம் எழும்பியது. கட்டடம் கட்டும்போது தென்பழநியில் இருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை ஆன படத்துக்குப் பதிலாக. ஒரு மூலவர் விக்கிரகத்தை வடிவமைக்கலாமே என்று தோன்றியது தம்பிரானுக்கு செட்டியாருக்கும்.
அதன்படி சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த ஒரு ஸ்திபதி மூலம் தென்பழநி முருகனின் திருவடிவத்தையே வடிக்கச் செய்து அதை பிரதிஷ்டை செய்தார்கள். அண்ணாசாமி தம்பிரானே முன்னின்று திருப்பணிகளை மேற்பார்வை இட்டார். மூலவர் சந்நிதிக்கு செங்கல் மற்றும் சுண்ணாம்பால் ஆன ஒரு கட்டடம் கட்டப்பட்டது. குடமுழுக்கை விரைவிலேயே நடத்து என்று ரத்தினசாமிக்கு உத்தரவு கொடுத்துவிட்டு, ஆவணி மாதம் அமாவாசை திதி, மக நட்சத்திர தினத்தன்று வடபழனி ஆண்டவரின் திருமேனியைப் பார்த்தவாறு, அவனது திருநிழலில் ஐக்கியமானார் அண்ணாசாமி தம்பிரான். இதன் பின் ஆலய வளாகத்தில் இருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் அண்ணாசாமி தம்பிரானின் திருமேனியை அடக்கம் செய்தார் ரத்தினசாமி. அதுதான் இன்றைக்கு சமாதி திருக்கோயிலாக விளங்கிறது.
தம்பிரான் மறைந்துவிட்டாரே... இனி வழிபாடுகளை எப்படி நடத்துவது? யார் சொல்வது? என்று குழப்பத்தில் ஒரு நாள் காலை வேளையில் தன் கடையைத் திறந்தார் ரத்தினசாமி செட்டியார் அப்போது பூட்டிய கடைக்குள் இருந்து காவி உடை தரித்த பெரியவர் ஒருவர் குடுகுடுவென்று வெளியே ஓடி வந்தார். செட்டியாருக்குத் குழப்பம். பூட்டிய கடைக்குள் இருந்து எப்படி? என்று தவித்த ரத்தினசாமி, வெளியே சாலையில் ஓடும் பெரியவரைத் தூரத்திக் கொண்டு ஓடினார். ஒரு கட்டத்தில் அந்தப் பெரியவர் நின்று திரும்பி, ரத்தினசாமியைப் பார்க்க-ஆடிப் போனார். சாட்சாத் அண்ணாசாமி தம்பிரானே! பரவசப்பட்டு சாமீ....சாமீ.... என்று அவரைத் துரத்திக் கொண்டே ஓடினார். ஓடிய பெரியவர் வடபழனி மூலவர் சந்நிதிக்குள் சென்றதை மட்டும் பார்த்தார் ரத்தினசாமி. அதன் பின் அந்த உருவம், வடபழனி ஆண்டவன் திருமேனியுள் கலந்தது.
தெய்வமே உத்தரவு கொடுத்து விட்டதே என்று தெளிந்து அதன் பின் இல்லறத்தைத் துறந்தார் ரத்தினசாமி செட்டியார். தம்பிரானைத் தொடர்ந்து நியமங்களுடன் குறி சொல்லி, ஆலயம் கட்டுவதற்கு வருமானத்தைப் பெருக்கினார் ரத்தினசாமி செட்டியார். ஒரு நாள் தம்பிரான் இவரது கனவில் தோன்றி, தன்னைப் போலவே திருத்தணிகை கோயிலுக்குச் சென்று முருகப் பெருமானுக்கு நாவைக் காணிக்கை செலுத்துமாறு உத்தரவிட்டார். அதன்படி முறையாக விரதம் இருந்து ஒரு ஆடிக் கிருத்திகை தினத்தன்று திருத்தணிகை சென்று. காணிக்கை செலுத்தினார். இதைத் தொடர்ந்து அண்ணாசாமியின் வாரிசாக ரத்தினசாமி தம்பிரான் என்றே இவர் அழைக்கப்பட்டார். கோடம்பாக்கம் குறி மேடை என்று அதுவரை அழைக்கப்பட்டு வந்த அந்தப் பகுதி வடபழனி ஆண்டவர் கோயில் ஆனது. ரத்தினசாமி தம்பிரான் காலத்தில்தான் வடபழனி ஆண்டவர் கோயிலுக்கு முதல் முறையாகக் கும்பாபிஷேகம் நடந்தது. சுமார் இருபது ஆண்டுகள் ஆலயத்திலேயே இருந்து வழிபாடுகளை மேம்படுத்தினார் ரத்தினசாமி தம்பிரான்.
இவரது காலத்திலேயே அடுத்த சீடராக இவரை ஆட்கொண்டவர்தான் பாக்கியலிங்கத் தம்பிரான். ஒரு கட்டத்தில் ஆலயத்தின் முழுப் பொறுப்பையும் கொடுத்த ரத்தினசாமி தம்பிரான், 1886-ஆம் ஆண்டு மார்கழி சஷ்டி நாளில் சதய நட்சத்திரத்தில் வடபழனி ஆண்டவரின் திருவடி சேர்ந்தார். அண்ணாசாமி தம்பிரானின் சமாதி அருகே இருவரும் அடக்கமானார்.
பாக்கியலிங்கத் தம்பிரான்: ரத்தினசாமி தம்பிரானுடன் இணைந்து பல திருப்பணிகளை நடத்தினார் பாக்கியலிங்கம். சைதாப்பேட்டையில் செங்குந்தர் மரபில் வந்தவர் இவர். ரத்தினசாமி தம்பிரான் வடபழனி ஆண்டவருக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்த பிறகு, தினமும் முருகனைத் தரிசிக்க வந்தார் பாக்கியலிங்கம் பொறுப்பான சீடரிடம் பொறுப்புகள் அனைத்தும் வந்து விட்டதே... தான் சார்ந்திருக்கும் குரு பரம்பரையின் விதிப்படி, திருத்தணி சென்று நாவைக் காணிக்கை செலுத்தி, பணிகளைத் தொடர்ந்தார் பாக்கியலிங்கத் தம்பிரான். தன் காலத்தில்தான் இந்தக் கோயிலை உலகறியச் செய்தார் இவர். வடபழனியில் இப்போதுள்ள மூலவர் கருவறையும் முதல் உட்பிராகாரத்திருச்சுற்றும் கருங்கல் திருப்பணியாகச் செய்தவர் இவர்தான். சுமார் ஐம்பது ஆண்டுகள் இவரது அயராத பணியால், வடபழனி ஆண்டவர் கோயில் தனிப் புகழை அடைந்தது என்றால் அது மிகையல்ல.
தேர்த் திருவிழா, சூரசம்ஹாரம் என்று விழாக்கள் பெருமளவில் வடபழனியில் கோலோச்சிய வேளையில் 1931-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் தசமி திதியன்று வடபழனி ஆண்டவாரின் திருவடியை அடைந்தார் பாக்கியலிங்கத் தம்பிரான். ஆக, குரு பரம்பரையைச் சேர்ந்த மூவருமே அடுத்தடுத்து சமாதி ஆகி உள்ளார்கள். இவர்களுக்குப் பிறகு குறி சொல்லும் வழக்கத்தைத் தொடர, தகுந்த சீடர்கள் கிடைக்கவில்லை. அந்த வழக்கமும் இவர்களின் காலத்தோடு போய்விட்டது.
இந்த மூன்று சித்த புருஷர்களின் உழைப்பாலும் தென்பழநி ஆண்டவரின் திருவருளாலும் சென்னை மக்களுக்கு இங்கேயே பழநித் திருக்கோயில் அமைந்துவிட்டது. ஆலயத்துக்கு அருகே அமைந்துள்ள சமாதி திருக்கோயிலும் வடபழனி ஆலய நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது. குருபூஜை தினங்கள் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. பிரமாண்டமான இடத்தில் அடுத்தடுத்து மூவைரயும் லிங்க ரூபத்தில் தரிசிக்கிறோம். வியாழன் மற்றும் பௌர்ணமி தினங்களில் இங்கே திரளான பக்தர்கள் வருகிறார்கள். பௌர்ணமி தினத்தன்று மாலை ஆறு மணியில் இங்கே சிறப்பு வழிபாடும் அன்னதானமும் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் முந்நூறு ரூபாயை வடபழனி ஆலயத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டால், இறையருட் பிரசாதமும் அனுக்கிரஹமும் கிடைக்கின்றன.
பல காலமாகக் கவனிப்பார் இல்லாமல் இருந்த இந்த சமாதித் திருக்கோயில் 1997-ஆம் ஆண்டு சிறப்புற எடுத்துக்கட்டப்பட்டது.
வடபழனி ஆலயம் இன்றைக்கு உயர்ந்தோங்கி நிற்பதற்கு இந்த மூன்று சித்த புருஷர்களே அடித்தளம் இட்டவர்கள். வடபழனி ஆண்டவரைத் தரிசிக்கத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
தைப்பூசத் திருநாளில், வடபழனி ஆண்டவரையும் - ஆலயம் உருவாவதற்குக் காரணமான மூன்று சித்த புருஷர்களின் சமாதித் திருக்கோயிலையும் தரிசித்து மால்மருகனின் ஆசி பெறுவோம்; மகான்களின் அருளைப் பெறுவோம்!