பதிவு செய்த நாள்
17
டிச
2014
01:12
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. சனி பகவான், துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு, நேற்று பிரவேசித்தார். அதையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. சனீஸ்வர பகவானுக்கு உகந்த பொருட்களை குண்டத்தில் இட்டு, சிவாச்சார்யார்கள் யாகம் நடத்தினர். தொடர்ந்து, யாக குண்டத்தில் வைத்து வழிபட்ட கலசம், பிரகார உலாவாக சனீஸ்வரர் சன்னதிக்கு எடுத்து செல்லப்பட்டது.தீர்த்த கலச புனித நீர் மற்றும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பழவகைகள், விபூதி என 17 திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சனிப்பெயர்ச்சி நேரமான பகல் 2:47 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பரிகார பூஜை செய்து சனீஸ்வரரை வழிபட்டனர்.
பல்லடம் அருகேயுள்ள கோளாறுபதி நவக்கிரக கோட்டையில் 108 வேள்வி குண்டங்களில் மகாயாகம், 1008 தீர்த்த கலச அபிஷேக விழா மற்றும் சிறப்பு யாக பூஜைகள் நடத்தி வழிபாடுகள் செய்யப்பட்டன. இன்று காலை 10:00 மணிக்கு சனிபகவான் மூலமந்திர வேள்வி, 11:00 மணிக்கு சனிபகவான் பெரும் திருமஞ்சனம், 108 சங்காபிஷேகம், மகாதீபார தனையுடன் பூஜைகள் நிறைவடைகின்றன.
சனிப்பெயர்ச்சி தவம் : திருப்பூர் வலையங்காடு பூந்தோட்டம் பகுதி யில் உள்ள சாமுண்டிபுரம் அறிவு திருக்கோயி லில் நடந்த நிகழ்ச்சியில், வாழ்த்து தவத்தை தொடர்ந்து விஞ்ஞான விளக்கங்களுடன் பஞ்ச பூத நவக்கிரக தவம் இயற்றப்பட்டது.உலக சமுதாய சேவா சங்கம், மதுரையை சேர்ந்த பேராசிரியர் ஆதவா பேசுகையில், ""எல்லா கிரகங்களும் மனிதனுக்கு நன்மையே; சில காலங்களில் மட்டும் அதன் தன்மை மாறியிருக்கிறது. நாம் செய்கிற செயல்களில், எண்ணங்களில் நமது பெற்றோர் கலந்திருக்கின்றனர். நமது எண்ணங்கள், மூதாதையர்களை சார்ந்திருக்கிறது. இறைவனுக்கு அடுத்ததாக, நவகிரகங்கள் உள்ளன, என்றார்.சாமுண்டிபுரம் அறிவுத்திருக்கோயில் தலைவர் சேரன் ரவிச்சந்திரன், துணை தலைவர் நடராஜ், பொருளாளர் கோவிந்தசாமி, பொறுப்பாசிரியர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.