பதிவு செய்த நாள்
19
டிச
2014
01:12
சத்தியமங்கலம் : பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, சபரிமலை சீஸனை முன்னிட்டு, பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அதிகம் வந்து செல்வர்.ஒவ்வொரு ஆண்டும், பங்குனி உத்திர நட்சத்திரம் அடுத்து வரும் செவ்வாய்கிழமை அதிகாலை, இக்கோவிலில், குண்டம் விழா நடப்பது வழக்கம். இவ்விழாவில், லட்சக்கணக்கானவர்கள் தீ மிதிப்பர்.தவிர, முக்கிய நாட்களில், இக்கோவிலில் அதிக கூட்டம் நிலவும். இங்கு, தினமும், காலை, ஆறு, மதியம், 12 மணி, மாலை, ஆறு மற்றும் இரவு, எட்டு மணி என, நான்கு கால பூஜைகள் நடக்கிறது.கார்த்திகை முதல் தேதியில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் வருகை மிகவும் அதிகரித்துள்ளது.ஏராளமான பஸ்களில் வரும் ஐயப்ப பக்தர்கள், இக்கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, ஓய்வெடுத்தும், இரவில், இங்கு தங்கி இருந்துவிட்டும் செல்கின்றனர். இதனால், கடந்த ஒரு மாதமாக, 24 மணி நேரமும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.