பதிவு செய்த நாள்
13
ஜூன்
2011
11:06
திருச்சி:திருச்சி மாவட்டம், வயலூர் சுப்ரமணியசுவாமி கோவிலில், வைகாசி விசாகத் தேரோட்டம் நேற்று நடந்தது. 10 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட புதிய தேரில், சுப்பிரமணிய சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருச்சியில் இருந்து, 12 கி.மீ., தொலைவில் உள்ள குமார வயலூரில், சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருப்புகழ் பாடி, வரலாற்றில் அழியாநிலை பெற்ற அருணகிரிநாதருக்கு, திருப்புகழ் பாட முருகன் அருள்பாலித்த திருத்தலம் இது.முருகனின் ஏழாம்படை வீடாக சிறப்பித்து கூறப்படும் இத்திருத்தலத்தில், முருகப்பெருமானுக்கு தேர் இல்லாதது, பக்தர்களுக்கு பெரும் குறையாக இருந்தது.கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில், 10 லட்ச ரூபாய் செலவில், கோவிலுக்கு புதிதாக திருத்தேர் செய்வதென தீர்மானிக்கப்பட்டது. கடந்த ஏழு மாதங்களுக்கு முன், தேர் உருவாக்கும் பணிகள் துவங்கின. முருகப்பெருமான் எழுந்தருளும் பீடம் வரை, பத்தேகால் அடி உயரத்திலும், முழுமையான அலங்காரத்துடன், 23 அடி உயரம் இருப்பதை போலவும் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது. தேர் வெள்ளோட்டம், அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் இளம்பரிதி, உதவி ஆணையர் அம்பலவாணன், செயல் அலுவலர் கருணாகரன் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. அதை தொடர்ந்து, வைகாசி விசாக பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. புதிய தேரில் முருகப்பெருமான் எழுந்தருள, கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் வடம்பிடிக்க, கிழக்கு ரதவீதி நிலையில் இருந்து புறப்பட்ட தேர், தெற்கு, மேற்கு, வடக்கு ரதவீதிகள் வழியாக நிலையை வந்தடைந்தது. அரோகரா கோஷம் முழங்க திருத்தேர், வீதிகளில் வலம் வந்தது.புதிய தேரில் பவனி வந்த சுப்பிரமணிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் செய்தனர்.