மேலூர்:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உட்பட்ட மேலூர் திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. திருவாதவூர் வேதநாயகி அம்பாள் உடனுறை திருமறைநாதர் சுவாமி கோயிலில் ஜூன் 4ல் கொடியேற்றத்துடன் வைகாசி விழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சுவாமி அருள்பாலித்தார். ஜூன் 8ல் மேலூருக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி எழுந்தருளினார். ஜூன் 11ல் திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் கோஷங்களுக்கு மத்தியில் நான்கு வீதிகளில் தேர் ஆடி அசைந்து சென்றது. பின் கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இணை கமிஷனர் ஜெயராமன், பேஷ்கார் ஜெயபிரகாஷ் விழா ஏற்பாடுகளை செய்தனர். இன்று காலை தீர்த்தவாரி நடக்கிறது.