நாகை நீலாயதாட்சி கோவிலில் 3 கொடி மரங்களுக்கு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2011 11:06
நாகப்பட்டினம்:நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் 140 ஆண்டுகளுக்கு பின், மூன்று கொடி மரங்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில் 2,000 ஆண்டுகள் பழமையானது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற மற்றும் சப்த ரிஷிகள் வழிபட்ட தலமாகும். இங்கு செய்த பாவத்திற்கு மன்னிப்பும், முக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.இக்கோவில் தனி சன்னிதிகளில் வீற்றிருக்கும் காயரோகணர், தியாகராஜர், நீலாயதாட்சி அம்மன் சன்னிதிகளுக்கு தனித்தனியே கொடி மரங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் காயரோகணர் சன்னிதி கொடி மரம் சேதமடைந்ததால், பக்தர்களால் புதிய கொடி மரங்கள் அமைக்கும் பணி பல மாதங்களாக நடந்து வந்தது.53 அடி உயரத்தில் தேக்கு மரத்தாலான கொடி மரங்கள் தயாரிக்கப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் கடந்த 10ம் தேதி துவங்கியது. 140 ஆண்டுகளுக்கு பின், நேற்று காலை 10.45 மணிக்கு கடம் புறப்பட்டு, 11 மணிக்கு மூன்று கொடி மரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.