காளையார்கோவில் : காளையார்கோவில் சோமேஸ்வரர் - சவுந்தரநாயகி கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. கோயிலில் வைகாசி விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இரவு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். ஒன்பதாம் நாளான நேற்று காலை 5 மணிக்கு அம்பாள், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அன்று காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பெரிய÷ தரில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளினர். சிறிய தேரில் சவுந்திரநாயகி அம்பாள் எழுந்தருளினார். நேற்று காலை 9.45 மணிக்கு பொதுமக்கள் ஒன்று கூடி, தேர் வடத்தை பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளையும் சுற்றி, காலை 11 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு பால் தீர்த்தம் வழங்கினர். பத்தாம் நாளான இன்று, இரவு 10 மணிக்கு சுவாமி அம்பாள் தெப்பத்தில் எழுந்தருள்வார். தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஏஎல்.ஏஆர்., அறக்கட்டளை நிர்வாகம், காளீஸ்வர குருக்கள் ஏற்பாட்டை செய்தனர்.