பதிவு செய்த நாள்
29
டிச
2014
01:12
ராசிபுரம் : ராசிபுரத்தில், வைகுண்ட ஏகாதசியையொட்டி பக்தர்களுக்கு வழங்குவதற்காக, 50 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசி திருவிழா, வரும், ஜனவரி 1ம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள வைணவ
கோவில்களில் சிறப்பாக நடக்கிறது. இதன்படி, ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெருமாள் ஸ்வாமிக்கு, அன்றைய தினம் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.அதைதொடர்ந்து, அதிகாலை 5 மணிக்கு, கோவிலின் பரமபத வாசல் திறக்கப்பட்டு, முதலில் பெருமாள் ஸ்வாமி வர, அதன்பின் பக்தர்கள் வருவர். சொர்க்கவாசல் வழியாக வெளியே வரும் பக்தர்களுக்கு, பிரசதமாக ஜனகல்யாண் அமைப்பு சார்பில், 24ம் ஆண்டாக லட்டு வழங்கப்படும்.
அதன்படி, நடப்பாண்டுக்கான லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. ராசிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், 15க்கும் மேற்பட்ட சமையல் தொழிலாளர்கள் இரவு பகலாக பணியாற்றி
வருகின்றனர்.