பதிவு செய்த நாள்
14
ஜூன்
2011
11:06
அழகர்கோவில் : அழகர்கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாகத்தை விரைவில் நடத்துவதற்காக புதுப்பிக்கும் பணிகளை கோயில் நிர்வாகம் வேகமாக செய்து வருகிறது. இந்து கோயில்கள் ஆகம விதிகளின்படி 12 ஆண்டகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழுவினர் முடிவு செய்தனர். இதன்படி 2009ம் ஆண்டு கும்பாபிஷேகப் பணிகள் துவக்கப்பட்டன. மூன்று கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டு, உபயதாரர்களிடம் இருந்து நிதி திரட்டப்பட்டது. கோயில் பிரகாரங்கள், மண்டபங்களில் உள்ள கருங்கல் தூண்கள், மேற்கூரைகள் சுத்தம் செய்யப்பட்டு வார்ணிஸ் பூசப்பட்டன. பிரகார மண்டப மேற்கூரையில் உடைந்திருந்த கருங்கல்கள் மாற்றப்பட்டன. கருவரை மண்டபத்திற்கு எதிரில் உள்ள மண்டப தூண்களில் ஏற்பட்டிருந்தன வெடிப்புகள் சரி செய்யப்பட்டன. ராஜ கோபுரம், மூலவர் சன்னதி, தாயார், ஆண்டாள், ராமர், சக்கரத்தாழ்வார் சன்னதி கோபுர சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டன. பணிகள் முடிந்த நிலையில் பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ராஜகோபுரம் அருகில் உள்ள கோட்டை சுவர் இடிந்து விழுந்தது. இதை ஆய்வு செய்ய வந்த கமிஷனர் சம்பத், ராஜகோபுரத்தின் முதல் நிலையில் வெடிப்பு ஏற்பட்டிருப்பதை பார்த்தார். அதை சரி செய்து கும்பாபிஷேகம் செய்ய உத்தரவிட்டார். இதனால் கும்பாபிஷேகம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது பணிகள் அணைத்தும் முடிவுற்ற நிலையில் பெருமாளுக்கு உகந்த நாளில் கும்பாபிஷேகம் நடத்த தேதி குறித்துள்ளனர். அறநிலையத் துறையில் அனுமதி கிடைத்தால், அதே நாளில் கும்பாபிஷேகம் செய்ய வசதியாக தற்போது கோயில் தூண்கள் "வாட்டர்வாஷ் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதுபற்றி குணசேகரன் கூறியதாவது: கோயில் கோபுரங்கள் சான்ட்பிளாஸ்ட் மற்றும் கெமிக்கல் பிளாஸ்ட் முறையில் சுத்தம் செய்யப்படுகின்றன. சிற்பங்கள், தூண்களில் இருக்கும் பழமை, புராதான பெருமைகள் அழிந்து விடுகின்றன. இதனால் பழமையை எடுத்துரைக்கும் புராதான சின்னங்கள் இம்முறையில் சுத்தம் செய்யக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. தற்போது"வாட்டர் வாஷ் முறை கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் சுத்தம் செய்யும்போது சிற்பங்களில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு, சுண்ணாம்பு பூச்சு, பெயின்டு அகற்றப்படுகின்றன. சிற்பங்கள் அழகும், பொழிவும் பெறுகிறது. பின் பாலிஷிங் கோட்டிங் செய்யப்படுகிறது. மீனாட்சி அம்மன், காஞசிபுரம், ஏகாம்பரேஸ்வரர், கரூர் கல்யாண சுந்தரேஸ்வரர் போன்ற கோயில்களில் இதே முறையில் புதுப்பித்து கொடுத்துள்ளேன். இதற்காக பிரத்யேகமான கருவியை கண்டுபிடித்துள்ளேன், என்றார்.