பதிவு செய்த நாள்
14
ஜூன்
2011
11:06
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழா நேற்று நடந்தது. இன்று மொட்டையரசு திருவிழா நடக்கிறது. கோயிலில் ஜூன் 4ல் துவங்கிய விசாக திருவிழாவில், ஜூன் 6ல் கும்பாபிஷேகம் நடந்ததால், வசந்த உற்சவம் நடைபெறவில்லை. பால்குட திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. அதே சமயம் மூலவர் சன்னதியில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணிய சுவாமி கரத்தில் உள்ள தங்க வேலுக்கு அபிஷேகங்கள் நடந்தன. சுவாமிக்கு குடம் குடமாக பாலாபிஷேகம்: காலை ஏழு மணிக்கு சண்முகர், வள்ளி தெய்வாøயுடன் புறப்பாடாகி விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார். வழக்கமாக காலை 9 மணிக்கு சுவாமி எழுந்தருளல் நடக்கும். நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் முன்னதாகவே எழுந்தருளினார். திருப்பரங்குன்றம், மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலையில் பால்குடங்களை சுமந்து பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் சுமந்துவந்த குடங்களில் இருந்த பால், சுவாமிக்கு காலை முதல் பிற்பகல் 2.30 மணிவரை தொடர்ந்து அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் பால், இளநீர், பன்னீர், மயில், புஷ்பம், பறவை காவடிகள் எடுத்து வந்தனர். பலர் முகங்களில் 20 அடி அகலம் கொண்ட வேலால் அலகு குத்தியும், ஏராளமானோர் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்து வந்தும் சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் 16 கால் மண்டபம் அருகே பூக்குழி இறங்கினர். காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார். மொட்டையரசு திருவிழா: விசாக திருவிழாவின் உச்சநிகழ்ச்சியாக இன்று மொட்டையரசு திருவிழா நடக்கிறது. காலை எட்டு மணிக்கு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் தங்க குதிரை வாகனத்தில் சட்டத்தேரில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எழுந்தருள்வர். அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு 11 மணிக்கு சுவாமி கோயில் சென்றடைவர். ஆண்டுக்கு ஒருநாள் இடம் மாறும் சண்முகர் : சண்முகர் சன்னதியில் எழுந்தருளியுள்ள ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு, லட்சார்ச்சனை, கந்த சஷ்டி திருவிழாவின்போது தினம் இருவேளை சண்முகார்ச்சனை நடைபெறும். வைகாசி விசாக தினத்தன்று மட்டும், சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் சன்னதியைவிட்டு புறப்பாடாகி விசாக கொறடு மண்படத்தில் எழுந்தருள்வார். இது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கிறது.