பதிவு செய்த நாள்
14
ஜூன்
2011
11:06
தென்காசி : பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் வரும் 16ம் தேதி மாதாந்திர முழுக்காப்பு வழிபாடு நடக்கிறது. பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் கடந்த 42 ஆண்டுகளாக தமிழ் மாத முதல் நாளன்று மாதாந்திர முழுக்காப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. வரும் 16ம் தேதி ஆனி மாதம் முதல் நாளை முன்னிட்டு மாதாந்திர முழுக்காப்பு அடியார்களால் சிறப்பு பூஜை வழிபாடு நடத்துகின்றனர். அன்று காலையில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் நடக்கிறது. மதியம் ருத்ர ஏகாதி ஹோமம், பூர்ணாகுதி, சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாத்தப்பட்டு மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், 108 லிட்டர் பால், பஞ்சாமிர்தம், தயிர், தேன், இளநீர், விபூதி, அன்னம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட மகாபிஷேகம் நடக்கிறது. மாலையில் கோயிலில் நெய் விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது. இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளலும், சுவாமிக்கு ஏகாந்த பூஜையும், கபால பைரவருக்கு சிறப்பு பூஜை வழிபாடும் நடக்கிறது. காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு மாதாந்திர முழுக்காப்பு அடியார்களால் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி, அறங்காவலர் குழுவினர், ஆடிட்டர் கிருஷ்ணசாமி, மாதாந்திர முழுக்காப்பு அடியார்கள் செய்து வருகின்றனர்.