பதிவு செய்த நாள்
14
ஜூன்
2011
11:06
திருநெல்வேலி : வைகாசி விசாகத்தை முன்னிட்டு நெல்லை குறுக்குத்துறை கோயில் சுப்பிரமணியருக்கு தங்கஅங்கி அணிவிக்கப்பட்டது. இதேபோல் சாலைக்குமரன் கோயில், தியாகராஜநகர் சின்மய தீர்த்தம் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசிவிசாகத்தை முன்னிட்டு நேற்று காலை சுப்பிரமணியர் சடாட்சர ஹோமம், கும்பபூஜை, அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது. அதன்பின் சுவாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டது. மாலையில் சுப்பிரமணியருக்கு சிறப்பு ராஜ அலங்காரத்தில் மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், இரவு அர்ச்சனை, தீபாராதனை ஆகியவை நடந்தது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணி நதியில் நீராடி முருகனை வழிபட்டனர். நேற்று இரவு முழுவதும் குறுக்குத்துறை கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை பாளையஞ் சாலைக்குமாரசுவாமி கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணியர், சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. தியாகராஜநகர் நான்காவது தெற்கு தெருவில் அமைந்துள்ள சின்மய மிஷன் சின்மய தீர்த்த ஞானாலய வளாகத்தில் ஸ்ரீ சின்மய கார்த்திகேயனுக்கு வைகாசி விசாகமான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லை வண்ணார்பேட்டை குட்டத்துறை பால சுப்பிரமணியசுவாமி, மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில், வண்ணார்பேட்டை முருகன் கோயில், நெல்லையப்பர் கோயில் ஆறுமுகநயினார் சன்னதி கோயில்களிலும் வைகாசி விசாசகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தது.