பதிவு செய்த நாள்
10
ஜன
2015
12:01
திருப்பூர்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஒன்று முதல் பிளஸ் 2 வரையில் பயிலும் மாணவ, மாணவியருக்கான திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாசுரங்கள் ஒப்புவித்தல் போட்டியும், கட்டுரைப் போட்டியும் நேற்று நடைபெற்றது. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட அளவில், 37 பள்ளிகளை சேர்ந்த 461 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பாசுரங்கள் ஒப்புவித்தல் போட்டியில் 318 பேரும், கட்டுரைப் போட்டிகளில் 143 பேரும் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு, முதல் பரிசாக 1,000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்களும், இரண்டாம் பரிசாக 750 ரூபாய் மதிப்பிலான புத்தகங்களும், மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு 500 ரூபாய் மதிப்பிலான புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டன.பரிசளிப்பு விழாவுக்கு, இணை கமிஷனர் இளம்பரிதி தலைமை வகித்தார். உதவி கமிஷனர் ஆனந்த் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற 36 பேருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.