பதிவு செய்த நாள்
10
ஜன
2015
12:01
நாமக்கல்: துத்திக்குளம் புனித வனத்து அந்தோனியார் ஆலய தேர்த்திருவிழா, ஜனவரி, 17ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. நாமக்கல் அடுத்த துத்திக்குளத்தில், புனித வனத்து அந்தோனியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, ஜனவரி, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று மாலை, 6 மணிக்கு, நாமக்கல் மறைமாவட்ட முதன்மைக்குரு பிரான்சிஸ் தலைமையில், திருக்கொடி ஏற்றமும், நவநாள் திருப்பலியும் நடக்கிறது. ஜனவரி, 18ம் தேதி, மாலை, 6.30 மணிக்கு, திருச்செங்கோடு மறைமாவட்ட முதன்மைக்குரு ஆசைத்தம்பி தலைமையில், திருப்பலி நடக்கிறது.இரவு, 7.30 மணிக்கு, சிறப்பு ஜெபக்கூட்டம், பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, 9.45 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட மின் தேரில், புனித வனத்து அந்தோனியார் எழுந்தருளி, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு ஆசீர் வழங்குகிறார். ஜனவரி, 19ம் தேதி புனித வனத்து சின்னப்பர் திருவிழா கோலாகலமாக நடக்கிறது. அன்று மாலை, 6.30 மணிக்கு, சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில், திருப்பலி நடக்கிறது. அன்று இரவு, 8 மணிக்கு கொடியிறக்கம், 8.15 மணிக்கு அன்னதானம் வழங்குதல், இன்னிசை கச்சேரி நடக்கிறது.