பதிவு செய்த நாள்
23
ஜன
2015
12:01
க.பரமத்தி: க.பரமத்தியில், ஒன்றரை கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள விநாயகர், வரதராஜபெருமாள், மஹா மாரியம்மன் மற்றும் சடையீஸ்வரரர் ஆகிய கோவில்களுக்கான கும்பாபிஷேகம் வரும், 26ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று, (23ம் தேதி) இரவு கிராமசாந்தி, நாளை விநாயகர் வழிபாடு, புண்ணியாகம், கணபதி ஹோமம், காலை, 10 மணிக்கு காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், இரவு முளைப்பாரி அழைத்தல், வாஸ்து சாந்தி ரக்ஷா பந்தனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக வேள்வி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும், 25ம் தேதி காலை, 8 மணிக்கு குமரகுருபர சுவாமிகள் பங்கேற்று ஆசி வழங்குகிறார். மறுநாள் காலை, 5 மணிக்கு மங்கள இசை வழிபாடு, புண்யாகம், காலை, 10 மணிக்கு, அனைத்து கோவில்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.சிவஸ்ரீ செல்வ கபில சிவாச்சாரியார் தலைமையில், கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.