நாகர்கோவில் : மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நிலை மாறி மது, மாது, மயக்கமருந்து, இண்டர்நெட் என்று மனித வாழ்க்கை மாறி விட்டது என்று மாதா அமிர்தானந்தமயி கூறினார்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற பக்தர்களின் அருளாசி கூட்டத்தில் அவர் பேசியதாவது: மனித சமுதாயம வேறுபாடுகளால் பிரிந்து காணப்படுகிறத, பிறரை கஷ்டத்தில் ஆழ்த்திக்கொண்டு தங்களுக்கு லாபம் பார்க்கின்றனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத்தால் பாதிப்பு கடுமையாகி வருகிறது. எந்த விஷயத்துக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. பூமி வெப்பமாதல், இயற்கை சீற்றம் போன்ற பல காரணிகளால் மனித குலம் ஆபத்தை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பட்டினியும், வறுமையும் பல நாடுகளை பாடாய் படுத்துகிறது. குழந்தை இறப்பும், தற்கொலையும் அதிகரித்து வருகிறது. பணத்துக்காக மனிதன் எதையும் செய்ய தயாராக உள்ளான். இளைய தலைமுறை எல்லாவற்றையும் மறந்து செயல்படுகிறது. குடும்ப வாழ்க்கையும், கணவன் மனைவி உறவும் கேலிகூத்தாகி வருகிறது. பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யும் கடமைகளை செய்வதில்லை. எல்லா பிரச்னைகளுக்கும் மனிதனிடம் அன்பும் கருணையும் இல்லாததும்தான் காரணம். நோய்களுக்கான வைரசை விட வெறுப்பு என்ற வைரஸ்தான் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. இந்த உலகம் என்பது நாமும் சேர்ந்ததுதான் என்பதை அனைவரும் உணர வேண்டும். இந்த உலகின் நன்மைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அனைவரும் முன்வரவேண்டும். பிறரிடம் எதையாவது பெற வேண்டும் என்பதில்தான் அனைவரும் குறியாக உள்ளனர். ஆனால் அதற்கு தனக்கு தகுதி இருக்கிறதா என்பதை எவரும் பார்ப்பதில்லை.