காவோவை ஸர்வா தேவதா; என்பதாக, பசு உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பற்பல தேவதைகள் வசிக்கிறார்கள் என்று கூறுகிறது சாஸ்திரம். ஆகவேதான், பசுவை பூஜை செய்தாலோ, பிரதட்சணம், நமஸ்காரம் செய்தாலோ, அதற்கு ஆகாரம் கொடுத்தாலோ அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக, அகத்திக்கீரை தருவது பாபத்தைப் போக்கும். அகஸ்த்ய யாகம் என்னும் சமஸ்கிருதப் பெயர் அகத்திக் கீரைக்கு உண்டு. ஆகாயத்தில் அகஸ்த்யம் என்னும் நட்சத்திரம், ஒரு சில மாதங்கள் மட்டுமே தோன்றும். இந்த நட்சத்திரத்தைப் பஞ்சாங்கத்தில் அகஸ்த்ய உதயம் என்று குறிப்பிட்டிருப்பார்கள். அந்த அகஸ்த்ய நட்சத்திரம் தோன்றும் காலத்தில் இந்தக் கீரை அதிகமாகக் காணப்படுவதால் இதற்கு அகஸ்த்ய யாகம் எனப் பெயர். இதைப் பசுவுக்குத் தருவதால் நாம் அறியாமல் செய்த பாபங்களும், அதனால் ஏற்படும் துன்பங்களும் விலகும். சூட்டைத் தணித்து ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் குணமுடைய அகஸ்த்ய யாகத்தை ஏகாதசியன்று உபவாசம் இருந்து விட்டு அடுத்த நாள் துவாதசியன்று சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானது.