புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக் கோட்டையின் புராதனப் பெயர் பொப்பண்ணக் கோட்டை. இது, சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார்க்கு சோறிட்டு ஆக்கம் தந்தவர் வாழ்ந்த கோட்டை என்று கூறப்படுகிறது. பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த வட்ட வடிவமான இந்த மண்கோட்டை, தற்போது சிதைந்து மண்மேடான கோட்டையாகக் காணப்படுகிறது. இங்குக் காணப்படும் செங்கற்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அவை பூம்புகார், உறையூர் பகுதிகளில் அகழ்வாயில் கிடைத்த செங்கற்களோடு ஒத்துக் காணப்படுகின்றன.