பதிவு செய்த நாள்
24
ஜன
2015
11:01
சென்னை: ஹஜ் பயணத்திற்கான பாஸ்போர்ட் சிறப்பு முகாம், பல்லாவரத்தில் இன்றும், நாளையும் நடக்க உள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்வோர் பாஸ்போர்ட் பெறுவதற்கான சிறப்பு முகாம், சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் உள்ள, மஸ்ஜிதே முனவ்வர் மசூதியில் இன்றும், நாளையும் நடக்க உள்ளது. இந்த முகாமில் புதிய பாஸ்போர்ட் பெறுதல், குழந்தைகளுக்கான பாஸ்போர்ட், பழைய பாஸ்போர்ட் புதுப்பித்தல், தவறிய பாஸ்போர்ட்டுகளுக்கு பதிலாக புதிய பாஸ்போர்ட் பெறுதல், முகவரி மாற்றம் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோர், பிறப்பு சான்றிதழ், பள்ளி மற்றும் திருமண சான்றிதழ், இரு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் வரவேண்டும். ஹஜ் மற்றும் உம்ரா பயணம் செல்வோர், இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம், அடுத்த வாரம், 31ம் தேதி மற்றும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி மீண்டும் முகாம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.