அவலூர்பேட்டை : மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் 15 லட்சத்து 75 ஆயிரத்து 419 ரூபாய் உண்டியல் வசூலானது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு அமாவாசை தோறும் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். பக்தர்கள் கோயில் உண்டியலில் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். வைகாசி மாத அமாவசை முடிந்து நேற்று கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையாளர் விழுப்புரம் ரகுநாதன், மேல்மலையனூர் குமரதுரை முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணும் பணி நடந்தது. இதில் 15 லட்சத்து 75 ஆயிரத்து 419 ரூபாய் ரொக்கமும், 150 கிராம் தங்க நகைகளும், 235 கிராம் வெள்ளி நகைகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது. கோயில் ஆய்வாளர் முருகேசன், மேலாளர் முனியப்பன் , அறங்காவலர் குழு தலைவர் துரை, அறங்காவலர்கள் , கோயில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வளத்தி போ லீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.