பதிவு செய்த நாள்
21
பிப்
2015
04:02
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கே சுமார் 8 கி.மீ. தொலைவு. பஸ் வசதிக்குப் பஞ்சம் இல்லை. எளிதில் பயணிக்கும் இடம்தான். வாருங்கள் ஸ்ரீதண்டபாணி தெய்வமும் ராமானந்த சுவாமிகளும் உறையும் அந்த தெய்வீகத் திருத்தலத்தைத் தரிசிப்போம். ராமானந்த சுவாமிகளுக்குப் பிறகு கவுளமார மடாலயத்தை நிர்வகித்தவர் அவரது சீடரான தவத்திரு கந்தசாமி சுவாமிகள். இதன் பிறகு மடாலயத்தை நிர்வகித்தவர் கந்தசாமி சுவாமிகளின் சீடரான தவத்திரு சுந்தர சுவாமிகள். இந்த மூவரின் சமாதியும் ஸ்ரீதண்டபாணி கோயில் பின்பக்கம் சமாதித் திருக்கோயிலாக அமைந்துள்ளது.
ராமானந்த சுவாமிகள் வாழ்க்கை சரிதத்தைப் பார்ப்போம். கவுமார மடாலயத்தை நிறுவியவரும் சிரவை ஆதீனத்தின் முதல்வரும் ஆவார் ராமானந்த சுவாமிகள். இவரது திரு அவதாரமே. முருகப் பெருமானின் அருளோடுதான் துவங்கி உள்ளது. சரவணம்பட்டியில் வசித்து வந்த வேலப்பக் கவுண்டர் - ஆண்டாளம்மை தம்பதிக்குத் திருமணமாகி ஆண்டுகள் பல கடந்தும். புத்திர பாக்கியம் வாய்க்கப் பெறவில்லை. எனவே, தங்கள் ஊருக்கு அருகில் கோயில் கொண்டுள்ள ரத்தினசல முருகனை இருவரும் வழிபட்டு வந்தனர். சிறிய குன்றின் மேல் குடிகொண்ட தெய்வம் அவன். தம்பதியருக்கு ஆசி புரிந்து திருவருள் வழங்கினான்.
ஆம்! முருகப் பெருமானின் திருவருளால், காளயுக்தி வருடம் புரட்டாசி மாதம் 26-ஆம் தேதி (1857-ஆம் ஆண்டு) ஞாயிற்றுக்கிழமை வளர்பிறைச் சதுர்த்தியும் விசாக நட்சத்திரமும் கூடிய சுப தினத்தில் தவத்திரு ராமானந்த சுவாமிகள் அவதரித்தார். சுவாமிகளின் அவதாரம் நிகழ்ந்த இடம்-கோவைக்கு அருகில் உள்ள கணபதி ஆகும். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் - ராமகுட்டி.
நெடுநாள் குழந்தையே இல்லாமல் இருந்த இல்லத்தில், மழலை பேசி துள்ளித் திரியும் ராமகுட்டியை அனைவரும் கொண்டாடினர். குழந்தைக்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டனர். அகத்திய முனிவரின் அம்சமாக இந்தப் பூவுலகில் தோன்றியவர் ராமானந்த சுவாமிகள் எனும் குறிப்பு கந்த நாடி சாதகம் என்கிற நாடி ஜோதிட நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முருகனின் திருவருள், அகத்தியரின் குருவருள் இவை இரண்டும் சேர்ந்தால் போதாதா? சிறு பிராயத்தில் இருந்தே ஆன்மிகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு ராமகுட்டி வளர்ந்தான். விளையாட்டுத்தனம் அதிகம் இவனை ஆக்கிரமிக்கவில்லை. மாறாக, சிறு பிராயத்தில் பல குழந்தைகளுக்கும் கைகூடாத நற்பழக்க வழக்கங்கள் எளிதில் ராமகுட்டியை ஆட்கொண்டன. அதிகாலையில் துயிலெழுதல், புனித நீராடுதல் இறைவனை வழிபடுதல், தோத்திரங்களை வாசித்தல், அமைதியான இடத்தில் உட்கார்ந்து இறைவனை தியானத்தில் ஆகிய நற்பண்புகள் ராமகுட்டியிடம் மிகுந்திருந்தன. இதனால், இவரைப் பார்க்கும் எவரும் பேர் சொல்லி அழைக்காமல், சாமி என்றே சொல்ல ஆரம்பித்தனர். சிறு வயதிலேயே கனவில் பல அற்புதக் காட்சிகளைக் கண்டவர் இவர்.
தனது 19-ஆம் வயதில் பெற்றோரின் விருப்பப்படி தாய்மாமன் மகளான சின்னமாள் என்பவரை மணந்துகொண்டு இல்லறம் துவக்கினார் சுவாமிகள். விவசாயத்தையும் ஆன்மிகத்தையும் கவனித்து வந்த சுவாமிகளுக்கு ஏனோ இல்லறம் இனிக்கவில்லை. இறைவனின் திருவிளையாடல் எது என்பதை எவர் அறிவார்? (சுவாமிகள் தன் 32 - ஆம் வயதில் உறவினரின் கட்டாயத்தின்பேரில் நஞ்சம்மாள் என்பவரை இரண்டாம் மனைவி ஆக்கிக் கொண்டார். முதல் மனைவிக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டாவது மனைவிக்கு ஒரு பெண் குழந்தை இருந்ததாகவும் தெரிகிறது.)
இறை இன்பம் பெருகப் பெருக... எதிலும் நாட்டம் குறைந்தது ராமானந்த சுவாமிகளுக்கு சிந்தை எல்லாம் இறைவனின் நினைப்புதான். ஒரு நாள் மாலை வேளையில் அனுஷ்டானங்களை முடித்தார். அருகில் உள்ள சிவன்கோயிலுக்குப் புறப்பட்டார். செல்லும் வழி எங்கும் முருகப் பெருமானின் மீது அவரது மனம் லயித்தது. எனவே அந்த முருகனையே விளித்து ஒரு பாடல் இயற்றத் தொடங்கினார். ஆனால், பாடல் முடிவுறுவதற்குள், கோயில் வந்துவிட்டது. அங்கே உறையும் சிவலிங்க மூர்த்தியைத் துதித்தார். வீடு திரும்பினார்.
அன்று இரவு அவரது கனவில் இறைவன் ஆட்கொண்டு (நேரிலே வந்ததும் என்று சொல்லப்படுவதுண்டு). திருச்செந்தூருக்கு வா என்று கட்டளை இட்டார். மறுநாள் கண் விழித்த பின் ஆனந்தம் மிகுதியால், முதல் நாள் துவங்கிய பாடலின் எஞ்சிய வரிகளை இயற்றி முடித்து. எப்படியாவது திருச்செந்தூர் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டார். வீட்டில் விவரம் சொன்னால். யாத்திரை செல்ல எவரும் அனுமதிக்க மாட்டார்கள் என்று தீர்மானித்த சுவாமிகள். அடுத்து வந்த ஒரு நாள் இரவில் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு நடையாத்திரையாகவே திருச்செந்தூர் புறப்பட்டார்.
விளாங்குறிச்சி எனும் கிராமத்தைத் தாண்டிச் செல்லும்போது கொஞ்சம் தடுமாறிப் போனார் சுவாமிகள். காரணம் - மையிருட்டு பாதையை மறைத்தது. அதை விட பாதையில் மண்டிக் கிடந்த கள்ளிப் புதர்கள் வேறு ஒரு கட்டத்துக்கு மேல் எந்த திசையில் பயணப்படுவது என்பது சுவாமிகளுக்குப் புலப்படவில்லை. இருக்கின்ற இடையூறுகள் போதாது என்று மழை வேறு தன் பாட்டுக்கு சுழற்றி அடித்தது. சுவாமிகள் முற்றிலும் நனைந்து போனார். முருகா.... நீதானேப்பா என்னை வரச் சொன்னாய்? இப்படி என்னை அலைக்கழித்தால் நான் என்ன செய்வேன்? என்று ஆற்றாமையின் காரணமாக சுவாமிகள் பரிதவித்தபோது, தூரத்தே ஓர் ஒளி தெரிந்தது.
அந்த ஒளிதான் வெகு நேரத்துக்கு அவருக்கு வழி காட்டியது. அந்த ஒளியைத் தொடர்ந்து நடந்து சென்றார். அன்றைய பொழுது விடியும் வேளையில் சுவாமிகள் அவிநாசி ரயில் நிலையத்தை அடைந்தார். பிறகு, வெகு நேரத்துக்குப் பின் வந்த ஒரு ரயிலில் ஏறி, மதுரையை அடைந்தார். மதுரை, திருப்பரங்குன்றம், திருநெல்வேலி, குறுக்குத்துறை, திருக்குருகூர், ஆழ்வார், திருநகரி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து இன்புற்றார். ஆழ்வார் திருநகரியில் இருந்து திருசெந்தூருக்கு எப்படிப் போக வேண்டும் என்று சுவாமிகளுக்குத் தெரியவில்லை.
திகைப்புடன் நின்று கொண்டிருந்த சுவாமிகளை நெருங்கினான். ஒரு சிறுவன். பிச்சு என்கிற அந்தச் சிறுவன் சுவாமிகளுடன் தென் திருப்பேரை வரை உடன் வந்தான். சுவாமிகளின் பகல் உணவுக்கும் அவனே ஏற்பாடு செய்தான். பிச்சு சற்று சோர்வடைந்தான். அங்கிருந்து திருச்செந்தூருக்கு சில கி.மீ. தொலைவு. பயணத்தைத் தொடரலாம் என்று சுவாமிகள் சொன்னபோது. நாளை காலை செல்லலாம் என்றான் பிச்சு. ஆனால் சுவாமிகளுக்கு இருப்புக் கொள்வில்லை. திருச்செந்தூரானைத் தேடி இவ்வளவு தொலைவு வந்துவிட்டோம். இன்னும் தொடர்ந்து நடந்து அவனது தரிசனத்தைப் பெற வேண்டும் என்கிற ஆவல் மிகுந்தது. எனவே, சிறுவனை விட்டு விட்டு சுவாமிகள் மட்டும் நடக்கத் தொடங்கினார்.
திருச்செந்தூருக்குள் நுழையும் வேளையில் இருட்டிவிட்டது. ஊரோ புதிது. அங்கு எவரும் சுவாமிகளுக்குப் பழக்கம் இல்லை. இரவு வேளையில் எங்கே தங்குவது என்று சுவாமிகள் குழம்பி இருந்தபோது, சுப்பய்யர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், சுவாமிகளுக்கு உதவ முன்வந்தார். இரவு உணவுக்கும் தங்குவதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்த சுப்பய்யர் அக்கணமே மறைந்துவிட்டார். இதுபோல் சுவாமிகளின் வாழ்வில் பல சம்பவங்கள் உண்டு.
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனை மனம் குளிர தரிசித்தார் சுவாமிகள். அவனது தரிசனத்தில் தன்னை இழந்தார். திருச்செந்தூரை விட்டு அகலவே மனம் இல்லாமல். அந்தத் திருத்தலத்திலேயே பல நாட்கள் தங்கலானார். செந்தில்வேலவன் தரிசனத்தில் ஒரு நாள் சுவாமிகள் திளைத்திருந்தபோது, உலக மாயையில் இருந்த தன்னை விடுவிக்கும்படி வேண்டினார். அன்றைய தினம் ஒரு சன்றோர் வடிவில் சுவாமிகளைக் காண வந்தான் செந்தில்வேலவன். அந்தத் திருவுருவத்தின் அழகில் சுவாமிகள் மெய்மறந்தார். தாங்கள் யாரோ? இந்தத் திருச்செந்தூரில் செந்தில்வேலவனைத் தவிர, வேறு எவரும் என்னை அறியார். இப்படி இருக்கும்போது என்னைச் சந்திக்க வந்திருக்கும் தாங்கள் யார் என்று தெரிந்துகொள்ளலாமா? என்று கேட்டார்.
மெள்ளச் சிரித்த அந்த சன்றோர், நான் எப்போதும் உன்னை விட்டு நீங்காமல் இருப்பவன். என் பெயர் சுப்பய்யா பிள்ளை என்று சொல்லி மறைந்தார். அந்த சன்றோர். சுவாமிகள் மெய்சிலிர்த்தார். இதற்குள் மகனைக் காணவில்லையே என்று பரிதவித்த சுவாமிகளின் தந்தையார் வேலப்பக் கவுண்டர் மனம் வருந்தி, பல இடங்களிலும் தேடலானார். பிற்பாடு, சுவாமிகள் இருக்கும் இடத்தை அறிந்து ஆட்களை அனுப்பி, சரவணம்பட்டிக்கு வரச் செய்தார். ஆனால், சுவாமிகள் மனம் இல்லாமல்தான் ஊர் திரும்பினார்.
ராமானந்த சுவாமிகளைஇல்லறத்தில் இருக்க விடுவாரா முருகப் பெருமான்? பழநியம்பதி தண்டாயுதபாணி, சுவாமிகளை ஆட்கொண்டார். பழநிக்குச் செல்ல சுவாமிகளுக்கு ஆவல் எழுந்தது. வீட்டில் முறையாக அனுமதி வாங்கிக்கொண்டு பழநிக்குச் சென்று பதிகம் பாடி அவனைத் துதித்தார். அதன் பின் தைப்பூசம்தோறும் பழநிக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். அப்படி ஒரு முறை தைப்பூசத்தின்போது பழநியை நெருங்குவதற்கு ஓரிரு கி.மீ. தொலைவில் உள்ள ஊரின் கிணற்றங்கரையை அடைந்து பல் தேய்த்துக் கொண்டிருந்தார் சுவாமிகள். அப்போது முருகப் பெருமான் ஓர் இளைஞன் வடிவில் தோன்றி. சுவாமிகளுக்கு எதிரே அவர் செய்வது போலவே பல் தேய்த்துக் கொண்டிருந்தார். இவர் செய்வதை எல்லாம் அப்படியே திரும்பச் செய்தான். அந்த இளைஞன், பழநி வரை சுவாமிகளுடன் பேசிக்கொண்டே வந்தான். பழநியை நெருங்கும் வேளையில் சுவாமிகளிடம் இருந்து திடீரென மறைந்தான். இதுவும் முருகப் பெருமானின் திருவிளையாடலே என்று சொல்வர்.
ராமானந்த சுவாமிகள் வாழ்ந்த அதே காலகட்டத்தில் வாழ்ந்தவர்தான் - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். ஓயாமல் பாடல்களை இயற்றிக்கொண்டே இருப்பார். வண்ணச்சரபம் சுவாமிகள். வள்ளியூர் மலைக்குச் சென்று அங்குள்ள முருகன் கோயில் தாமே துறவு மேற்கொண்டவர் இவர். ஜபம், தியானம், வழிபாடு, பாடல் இயற்றுதல் என்றே இருந்தவர். வெங்கடரமணதாசர் என்ற அன்பர் மூலம் வண்ணச்சரபம் சுவாமிகளைப் பற்றி அறிந்த ராமானந்த சுவாமிகள் ஒரு நாள் அவரைச் சந்தித்து. அவரையே தன் ஞானகுருவாகக் கொள்ளவேண்டும் என்று தீர்மானித்தார்.
அதற்குரிய வேளையும் வாய்த்தது. 1880-ஆம் ஆண்டு பழநியில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. வண்ணச்சரபம் சுவாமிகளைச் சந்தித்து. அவரது திருவடிகளைப் பணிந்து வணங்கினார். தனக்கு உபதேசம் புரியுமாறு வேண்டுகோள் வைத்தார். ஞானிகள்தானே, ஞானிகளை அறிவர். வண்ணச்சரபத்துக்குத் தெரியாதா வந்திருப்பவர் யார் என்று? ராமானந்தரின் வலது செவியில் ஆறெழுத்து மந்திரத்தை உபதேசித்து, அவர்தம் சிரசின் மீது தம் வலக்கரத்தை வைத்து அருட்கண்களால் ஒரு பார்வை பார்த்தார். சிலிர்த்துப் போனார் ராமானந்தர்.
அப்போது, நின்ற கோலத்தில் கைகளில் தண்டாயுதத்தையும் சின்முத்திரையும் தாங்கிய வண்ணம் மேற்குத் திசையைப் பார்த்து சாட்சாத் பழநி முருகனைப் போலவே ஒரு கணம் காட்சி அளித்தார். வண்ணச்சரபம் சுவாமிகள். முருகா என்று வாய் விட்டு அலறிவிட்டார். ராமானந்தர். இதன் பின் ஊர் திரும்பிய ராமானந்தர். குருநாதர் காட்டிய பாதையில் நடந்தார். அதிகாலையில் நீராடி ருத்திராட்சம் அணிந்து பழநி ஆண்டவர் படத்துக்கும் குருநாதரான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் படத்துக்கும் பூஜை செய்வார். ராமானந்தரின் அருள் வாழ்க்கை பற்றிக் கேள்விப்பட்ட பலரும் தங்கள் பிணிகளுக்கும் மன வருத்தம் அகல்வதற்கும் இவரை நாடி வந்தனர். அனைவருக்கும் அருள் வழங்கி அவற்றை அகற்றினார்.
26.6.1888 -ல் வண்ணச்சரபம் சுவாமிகள் திருவரங்கத் திருவாயிரத்தை. அரங்கனின் இருப்பிடமான திருவரங்கத்தில் அரங்கேற்றப் போகும் செய்தி அறிந்து தன் ஞானாசிரியனுக்கு உதவ அங்கே சென்றார் ராமானந்தர். அங்கே தினமும் வரும் ஒரு வைணவப் பெண். ஒரு நாள் அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு வரவில்லை. விசாரித்தபோது, அந்தப் பெண்ணை அரவம் தீண்டி விஷம் தலைக்கேறி விட்டதாகச் சொல்லப்பட்டது. அந்தப் பெண்ணின் விஷம் இறங்காவிட்டால். எம் அரங்கேற்றம் இனி இங்கே தொடராது என்று வண்ணச்சரபம் சுவாமிகள் அறிவிக்க.... கருடாழ்வாரே பலரும் அறியும் வண்ணம். ராமானந்தரிடம் வந்து, விஷம் நீங்கும் என்று சொன்னார். அதுபோல அந்தப் பெண்ணும் பிழைத்தாள்.
வண்ணச்சரபம் சுவாமிகள் விழுப்புரத்தை அடுத்த திருவாமாத்தூரில் மடம் அமைத்துத் தங்கி இருந்தார். குருநாதரின் பிரிவைத் தாங்க முடியாமல், இங்கே வந்தார் ராமானந்தர். குருநாதரை வணங்கி, சற்குரு பதிகம் பாடினார். இதன் பின் 5.7.1898 அன்று வண்ணச்சரபம் சுவாமிகள். முருகப் பெருமானின் திருவடியை அடைந்தார். குருநாதரின் பிரிவை எண்ணி மனம் கலங்கினார் ராமானந்தர். குருபூஜை காலத்தில் அடியார்களோடு திருவாமாத்தூர் சென்று வணங்கினார்.
தனிமையை விரும்பினார் ராமானந்தர். இந்த வேளையில் அவருடன் இருந்த அன்பர்கள் ஒரு திருமடம் உருவாக்குமாறு அவரை வேண்டினர். அதன்படி சரவணம்பட்டியில் உருவானதே - கவுமார மடாலயம். அந்தத் திருமடத்தில் ஒரு குகையை உருவாக்கி ஒரு மண்டல காலத்துக்கு உணவு எதுவும் உட்கொள்ளாமல் நிஷ்டையில் கூடினார். ராமானந்தர். அந்தக் காலகட்டத்தில் அவர் பெற்ற அருட்காட்சிகள் பலவாகும். அதன் பின் தனது திருமடத்தில் கோயில் கட்ட விரும்பினார். முதலில் குடிகொண்டவர் தண்டபாணி தெய்வமே! அன்பர்கள் செய்த பொருளுதவியால் திருமடம் மென்மேலும் வளர்ந்தது.
சுவாமிகளின் உறவினரான கந்தசாமி என்பவர், அவரிடம் ஞானோபதேசம் பெற்று, தண்டபாணி கோயில் பூஜைகளை நடத்தினார். (ராமானந்தருக்குப் பிறகு தவத்திரு கந்தசாமி சுவாமிகளே, சிரவை ஆதீனப் பட்டத்துக்கு வந்தார்.)
குருநாதர் வண்ணச்சரபம் சுவாமிகள் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்ததை எல்லாம் தம் கைப்பட பெரிய நோட்டில் எழுதி. அத்தனையையும் தொகுத்தார் ராமானந்தர். தொடர்ந்து பல யாத்திரைகளை மேற்கொண்ட சுவாமிகள். பழநியம்பதிக்குச் சென்று நிஷ்டையில் கூடினார். முருகப் பெருமானுக்கு அபிஷேகங்கள் செய்வித்து தரிசித்தார். அதன் பிறகு யாத்திரைகள், கோயில் திருப்பணிகள் என தன் வாழ்நாளைக் கழித்த சுவாமிகள் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் கூடிய வெள்ளிக்கிழமை (21.12.1956) அன்று மாலை 5 மணி அளவில் தமது தவச்சாலையான கனகசபைக்கட்டடத்தின் ஆதீனத்தில் இருந்தபடி மனம் ஒடுங்கி, நிஷ்டையில் கூடி முருகப் பெருமானின் திருவடிகளில் கலந்தார்.
ராமானந்த சுவாமிகளுக்குப் பிறகு கந்தசாமி சுவாமிகளும் அவருக்குப் பிறகு சுந்தர சுவாமிகளும் மடாலயத்தைத் திறம்பட நடத்தி, இறை பக்தியைப் பெருகினர். அவர்களின் வழியில் தற்போது மடாலய ஆதீனகர்த்தராக தவத்திரு குமரகுருபர சுவாமிகள். தண்டபாணி தெய்வத்தைப் போற்றியும். குருநாதர்களின் வழியிலும், அறப் பணி, கல்விப் பணி போன்றவற்றில் சிறந்து விளங்கியும் வருகிறார்.
சிரவை ஆதீனத்தின் கீழ் இயங்கி வரும் இந்தத் திருக்கோயிலின் பின்புறம் மூவருக்கும் சமாதி உள்ளது. இங்கேயே மடாலய அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கோயில் ஸ்ரீதண்டபாணி தெய்வத்தோடு ஏராளமான திருமேனிகளைத் தரிசிக்கலாம். அரசரடி விநாயகர், சித்தி மகோத்கட விநாயகர், பாம்பன் சுவாமிகள், ஸ்ரீபாண்டுரங்கர், அவிநாசியப்பர், ஸ்ரீகருணாம்பிகை உட்பட பல திருவுருவங்களைத் தரிசிக்கலாம்.
சோலை போன்ற இயற்கைச் சூழலில், மணதை இதமாக்கும் இந்த மடாலயத்தைத் தரிசிக்க ஆவலா? கோவைக்குப் போகும்போது ஒருமுறை தரிசித்து, இந்த மகான்களின் அருள் பெறுங்கள்! மாசில்லா வாழ்வு பெறுங்கள்!
தகவல் பலகை
தலம் : சரவணம்பட்டி.
சிறப்பு : ஸ்ரீராமானந்த சுவாமிகள் சமாதி.
எங்கே இருக்கிறது?: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது. சரவணம்பட்டி.
எப்படிப்போவது?: தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் கோவையை அடைவது எளிது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சின்னவேடம்பட்டி செல்லும் நகரப் பேருந்து எண்கள்: எஸ் 9ஏ, எஸ் 9பி, 15 பி, 47, 86 போன்ற பேருந்துகளில் பயணித்து சின்னவேடம்பட்டியில் இறங்கிக்கொள்ள வேண்டும். அங்கிருந்து ஐந்துநிமிட நடை தூரத்தில் கவுமார மடலாயத்தை அடையலாம்.
கோவையில் - சத்தியமங்கலம் சாலையில் கோவில்பாளையம், அன்னூர் செல்லும் பேருந்துகளில் (எண்கள்:24, 45,, 45ஏ,45பி, 45சி, 63, 81, 82 உட்பட பல) பயணித்து எஸ்.ஆர்.பி. மில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் சரவணம்பட்டிக்கு இரண்டு கி.மீ. தொலைவு. எஸ்.ஆர்.பி. மில் பேருந்து நிலையத்தில் இருந்து சின்னவேடம்பட்டிக்கு மினி பஸ் வசதி உண்டு.
சின்னவேடம்பட்டியில் இருந்து எஸ்.ஆர்.பி மில் பேருந்து நிறுத்தத்தில் இருந்தும் ஆட்டோ வசதி உண்டு.
தொடர்புக்கு:
கவுமார மடாலயம்,
சின்னவேடம்பட்டி, கோவை-641 049,
தொலைபேசி: 0422-2666370,
நன்றி: திருவடி சரணம்