கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தமிழக திருப்பதி, திருவிண்ணகர், பூலோக வைகுந்தம் என்றெல்லாம் எனப்படும் ஒப்பிலியப்பன்கோவில் ஸ்ரீவேங்கடாசலபதி சுவாமி கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். கடந்த மாதம் 12ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டது. நேற்று மீண்டும் உண்டியல் திறப்பு நடந்தது. மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை நகைகள் சரிபார்ப்பு இணை கமிஷனர் புகழேந்தி, கோவில் உதவி கமிஷனர் தென்னரசு, ஆய்வாளர் கண்ணன் மற்றும் இந்தியன் வங்கி கிளை மேலாளர் சீனிவாசன் தலைமையில் வங்கி அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் முன்னிலையில் உண்டியல்கள் அனைத்தும் திறந்து எண்ணப்பட்டன. கோவிலில் உள்ள 12 பொது உண்டியல் மூலம் ரொக்கமாக ரூபாய் 10 லட்சத்து 32 ஆயிரத்து 429ம், தங்கமாக 70 கிராமும், வெள்ளியாக 430 கிராமும் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். ஒரு தங்ககவச உண்டியலில் ரொக்கமாக ரூபாய் 9 லட்சத்து 85 ஆயிரத்து 657ம், தங்கமாக 185 கிராமும், வெள்ளி 220 கிராமும் செலுத்தியிருந்தனர். பசு பாதுகாப்பு உண்டியலில் ரொக்கமாக ரூபாய் 1 லட்சத்து 34 ஆயிரத்து 449ம் செலுத்தியிருந்தனர். இதன் மொத்த மதிப்பு 25 லட்சம் ரூபாய் ஆகும்.