பதிவு செய்த நாள்
09
மார்
2015
11:03
ப.வேலூர்: ராஜவாய்க்கால் அருகே சிங்கார கருப்பாச்சி கோவிலில் ஸ்வாமியை சிலைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய சம்பவம், ப.வேலூர் பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ப.வேலூர் அடுத்த ராஜவாயக்கல் அருகே சிங்கார கருப்பாச்சி கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த சிவராத்திரி அன்று புதிதாக ஸ்வாமி சிலையும், கன்னிமார் சிலைகளும் அமைக்கப்பட்டது. வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை மற்றும் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை செய்யப்படும். விவசாயிகள் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள், இங்கு சென்று ஸ்வாமியை வழிபட்டுச் செல்கின்றனர். மேலும், அவ்வழியாக வந்து செல்லும் லாரி டிரைவர்கள், வழித்துணை ஸ்வாமியாகவும் வழிபட்டு வருகின்றனர். இக்கோவில், 100 ஆண்டு பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இங்கு வந்த மர்ம நபர்கள், ஸ்வாமியை வெட்டி எடுத்துச் சென்றதுடன், கன்னிமார் ஸ்வாமிகளை அடித்து நொறுக்கினர். நேற்று காலை, 7 மணிக்கு கோவிலுக்கு சென்ற பூசாரி, குப்புராஜ், 44, ஸ்வாமி சிலையை உடைத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதையும், கன்னிமார் ஸ்வாமி சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, ப.வேலூர் போலீஸில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து, ஸ்வாமி சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.