பதிவு செய்த நாள்
09
மார்
2015
02:03
அனந்தாழ்வான்: கர்நாடக மாநிலத்தில், மைசூர் பகுதியில் காவேரி நதிக்கரையில் உள்ள சிறுபுத்தூர் இவருடைய அவதார ஸ்தலம். அனந்தாழ்வானின் திருத்தகப்பனார் கேசவாச் சார்யார். யஜுர் வேதி. பரத்வாஜ கோத்திரர். அனந்தாழ்வான் கி.பி. 1053 விஜய நாம ஆண்டு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். சிறு பருவத்தி லிருந்தே இவர் பகவத் சிந்தனையில் முழ்கியவர்.
ஆண்பிள்ளை: அனந்தாழ்வான் ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்றார். அங்கு பகவத் ராமானுஜரின் கோஷ்டியில் இருந்தார். எம்பெருமானார் திருவாய்மொழி காலக்ஷேபம் நிகழ்த்தி வருகையில் சிந்து பூ மகிழும் திருவேங்கடம் என்னும் பாசுரத்திற்கு விளக்க மளிக்கும்பொழுது புஷ்ப மண்டபமான திருமலையில் நித்தியவாசம் செய்து, சிந்து பூ மகிழும் திருவேங்கடவனுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்வாருண்டோ? என்று கேட்டார். பன்னிரண்டாயிரம் வைஷ்ணவர்களும். எழுநூறு ஜீயர்களும் இருந்தபோதும் அவருடைய பிரிவை நினைத்து வாய் பேசாமல் இருந்தனர். அதோடு அக்காலத்தில் திருமலையில் கடும் குளிர் நிலவியதால் யாரும் செல்வதற்கு விரும்பவில்லை. அதுமட்டுமல்ல யாளி, கோளரி, கானம், வானரம் போன்ற துஷ்ட விலங்குகள் வாழும் வேங்கடம் அது. ஆனால் அனந்தாழ்வானோ அடியேன் செல்கிறேன் என்று அக்கோஷ்டியில் இருந்து பதிலளித்தார். நீரல்லவோ ஆண் பிள்ளை என்று எம்பெருமானாரால் பாராட்டைப் பெற்றார். அனந்தன் எனும் பெயருடைய இவ்வாசாரியர். இக்காரணத்தாலேயே இவர் குலத்தவர்கள் இன்றும் அனந்தாண் பிள்ளை என்னும் பட்டத்தோடு விளங்குகின்றனர். அனந்தாழ்வான் திருவனந்தாழ்வான் அம்சம் என்றும் குறிப்பிடுவர். அனந்தாழ்வானுக்கு மதுரகவி தாசன் என்றும் பெயருண்டு.
திருமலையில் புஷ்ப கைங்கர்யம்: எம்பெருமானாரின் கட்டளைக்கிணங்க தன் துணைவியருடன் திருமலைக்கு பயணமானார் அனந்தாழ்வான். புஷ்ப கைங்கர்யம் செய்வதற்காக எம்பெருமானின் திருக்கோயிலுக்கு அருகாமையில் ஒரு ஏரியையும். நந்தவனத்தையும் அமைக்க திட்டமிட்டார். உதவி புரிய அந்நேரம் அங்கு யாரும் இல்லை. ஆனால் பிறருடைய உதவியைப் பெறுவதும் குருவின் கட்டளைக்கு கலங்கம் ஏற்படும் என்று எண்ணினார். இதையறிந்த அனந்தாழ்வானின் தர்மபத்தினி தானிருக்கிறேன் என்று கூறினார். நிறைமாத கர்ப்பினி எனினும் எம்பெருமான் மேல் பக்தியினால் ஆணுக்கு ஈடாக மண் கூடையை சுமந்தாள். அனந்தாழ்வானின் ஆனந்தத் திற்கு எல்லையே இல்லை. தான் ஒரு கடப்பாறையை கையில் ஏந்தி நின்றார். சகல லோகநாதனை ஸ்மரித்தார். கடப்பாரையால் மண்ணை தோண்டினார். தோண்டிய மண்ணை கூடையில் போட்டார். அம்மண் கூடையை அனந்தாழ்வான் தர்ம பத்தினி தலைமேல் வைத்துக் கொண்டு சிறிது தொலைவில் சென்று கொட்டிவிட்டு மறுபடியும் வந்தார். இதையெல்லாம் கண்டறிந்த திருவேங்கடவன் ஒரு சிறுவன் வடிவத்தில் வந்து, அவருடைய கையில் இருந்த மண்கூடையை வாங்க முயன்றான். அனந்தாழ்வான் உனக்கு வேண்டுமானால் நீயும் இன்னொரு கைங் கர்யத்தைச் செய்துகொள். ஆசார்யன் எனக்கு நியமித்த கைங்கர்யத்தில் பங்கு கேட்காதே. இந்த கடப்பாரையினாலே அடிப்பேன் என்றார். அச்சிறுவன் சும்மாயிருக்காமல் அனந்தாழ்வானின் தர்மபத்னியிடம் சென்று அம்மா! நீங்கள் மிகவும் சோர்ந்து போயுள்ளீர்கள். சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளம்மா. நான் உதவி புரிகிறேன் என்றான். இதைக் கேட்டுக் கொண்டிருந்த தர்மபத்னி மெய்மறந்து தன்னையும் அறியாமலேயே மண் கூடையை கொடுத்து விட்டாள். அச்சிறுவன் இக்கைங்கர்யத்தில் ஈடுபட்டதைக் கண்ட அனந்தாழ்வான் சினம் கொண்டு அவனை அடிப்பதற்காகத் துரத்தி கொண்டு ஓடினார். ஓடுகின்ற சிறுவன் மீது அனந்தாழ்வான் தன் கையில் இருந்த கடப்பாரையை வீசி எறிந்தார். அது அச்சிறுவனின் திருமோவாய் மீது பட்டது. இரத்தம் சலசலவென கொட்டியது. அச்சிறுவன் கோயிலுக்குள் சென்று மறைந்து விட்டான். மறுநாள் காலை அர்ச்சக ஸ்வாமிகள் கோயிலுக்குள் சென்று பார்க்கையில் திருவேங்கடவன். திருமோவாயில் இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. அதை அறிந்த அனந்தாழ்வான் சிறுவனாக வந்தவன் அவனே என்றுணர்ந்தார்.
எம்பெருமானிடம் அவசரபட்டோமே என்று மனம் கலங்கினார். இரத்தப் பெருக்கை நிறுத்த என்ன செய்வதென்று திகைத்த போது. திருவேங்கடவன் அவருடைய பாதத்தூளியைத் தன்னுடைய மோவாயில் வைத்து அழுத்துமாறு கூறினார். அப்படியே அனந்தாழ்வான் செய்ய இரத்தப்பெருக்கு நின்று விட்டன. அனந்தாழ்வான் நிம்மதி அடைந்தார். அப்போது எம்பெருமான் அனந்தா நீ வருந்தாதே கடப்பாரையை என் மீது வீசினாயல்லவா. இரத்தம் வந்த இடத்தில் வடு மோவாயில் நிரந்தரமாக இருந்து விடும். அதுமட்டுமன்றி நித்தியமும் என் மோவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றப்படும் என்று கூறினார். இதனால் தான் இன்றும் திருவேங்கடவனுக்கு திருமோவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றப்படுகிறது. அது பாதரேணு (திருவடிப்பொடி) என்று கூறப்படுகிறது. பிறகு எம்பெருமான் உன் கடப்பாரையை உனக்கு கொடுக்க முடியாது. முஹதுவாரத்தின் சுவற்றின் மேல் நிரந்தரமாக வைக்கப்படும். பக்தர்கள் இந்நிகழ்வினை பல காலம் நினைவுபடுத்திக் கொள்வார்கள் என சிரித்தார். இன்றளவும் திருமலையில் கோபுர நுழைவு வாயிலில் வடக்கே மதில் மேல் கடப்பாரை (*யை) காணலாம். பிறகு அனந்தாழ்வான் நந்த வனத்தை அமைத்து முடித்து அதில் பூக்கின்ற புஷ்பங்களை மாலைகளாகத் தொடுத்து அதை நித்தியமும் திருவேங்கடவனுக்குச் சமர்ப்பித்து ஸ்ரீமத்ராமானுஜரின் நியமனப்படி புஷ்ப கைங்கர்யத்தை செய்து கொண்டு வந்தார்.
மகிழ மரத்திற்கு மரியாதை: திருவேங்கடமலையில் அனந்தாழ்வான், கைங்கர்யம் செய்வதற்காக வெட்டிய ஏரி, பூக்களுக்காக அமைத்த நந்தவனம் அதில் அனுஷ்டானத்திற்காக ஏற்படுத்திய ராமானுஜபுஷ்கரிணி என்ற குளம் ஆகியவை இன்றும் நாம் காணும்படி அமைந்துள்ளன. அனந்தாழ்வான் பரமபதித்தபோது, அவருக்கு இந்த நந்தவனத்திலேயே சரம ஸம்ஸ்காரம் செய்யும்படி திருவேங்கடவன் நியமிக்க. அப்படி ஸம்ஸ்காரம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு மகிழ மரமாக தற்போதும் அனந்தாழ்வான் எழுந்தருளியுள்ளார்.
அனந்தாழ்வானே மகிழ மரமாக எழுந்தருளியிருப்பதாக நாம் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் திருவேங்கடமுடையானே அதை உறுதி செய்யும் வகையில் வருடம்தோறும் இரண்டு முறை இத்தோட்டத்திற்கு எழுந்தருளி மகிழ மரமாக எழுந்தருளியுள்ள அனந்தாழ்வானுக்கு மாலை சடகோபன் முதலியன சாதித்து மரியாதைகளை அருளுகிறான். பிராட்டியை விட்டு விட்டுக் கோயிலுக்கு அப்பிரதக்ஷணமாகத் திருவேங்கடமுடையான் ஓடிய நிகழ்ச்சியை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு வருடமும் பிரம்மோத்ஸவம் முடிந்த மறுநாள் மாலை திருவேங்கடமுடையான் உபயநாச்சிமார்கள் இல்லாமல், தனியாக கோயிலுக்கு அப்பிரதக்ஷிணமாக அனந்தாழ்வான் தோட்டத்திற்கு எழுந்தருளி, அங்கு அமைந்துள்ள மண்டபத்தில் ஆஸ்தானம் கண்டருளி பிறகு. மகிழ மரத்திற்கு மாலை சடகோபன் முதலிய மரியாதைகளை அருளுகிறான். இந்நிகழ்விற்கு ஸ்ரீவாரி பாக்ஸவாரி உத்ஸவம் என்று பெயர் பாக் என்றால் தோட்டம் ஸவாரி என்றால் புறப்பாடு அனந்தாழ்வான் பரமபதித்த தினமான திருவாடிப்பூரத்தன்றும் ஒவ்வொரு வருடமும் திருவேங்கடமுடையான் உபயநாச்சிமார்களுடன் கோயிலுக்குப் பிரதக்ஷிணமாக தோட்டத்திற்கு எழுந்தருளி அங்குள்ள மகிழ மரத்திற்கு மாலை, சடகோபன் முதலியன அருளுகிறான். எம்பெருமானே திருவரசிற்கு எழுந்தருளி, மரமாக எழுந்தருளியுள்ள ஆசார்யருக்கு மரியாதை செய்வது. வேறு எந்த ஒரு ஆசார்யருக்கும் யாதொரு திவ்யதேசத்திலும் நடைபெறாத தனிச் சிறப்பாகும்.
அனந்தாழ்வான் படைப்புகள்: அனந்தாழ்வானின் படைப்புகளில் முதன்மையானது வேங்கடேச இதிஹாசமாலா, இதில் ஏழு பிரிவுகள் இருக்கின்றன. 35 திருமலைக்கு சம்பந்தமான விக்ஞான சம்பந்த விஷயங்கள் இராமாநுஜ சதுசுலோகி கோதா சதுசுலோகி என்பவை அனந்தாழ்வான் பிரசித்தி ஸ்தோத்திர கிரந்தங்கள் ஏய்ந்த பெருங்கீர்த்தி இராமானுசன் என்று தொடங்கும் திருவாய்மொழித் தனியனையும் அருளிச்செய்துள்ளார். அனந்தாழ்வானைப் போல நாமும் வாழ்ந்து ஆசார்யனின் வாக்கை நிறைவேற்றி நாராயண திருவடி பிராப்தி பெற்று இன்புற்று வாழ்வோமாக.
அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞாநதிமிராபஹம்: ஆச்ரிதாநாம் ஸுசரணம்
வந்தே அநந்தார்ய தேஸிகம்.
ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபதாம் போருஹத்வயம்: ஸதுத்தமாங்க
ஸந்தார்யம் அநந்தார்ய மஹம் பஜே
மங்களாசாஸந: பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைராசார்யைஸ்
ஸத்க்ருதாயாஸ்து மங்களம்
அனந்தாழ்வான் திருவடிகளே சரணம்.